அதிமுகவில் அப்போது என்னுடைய உழைப்புக்கும் விசுவாசத்துக்கும்தான் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளித்துள்ளார் மாநில இயற்கை வளத் துறை அமைச்சர் எஸ். ரகுபதி.
புதுக்கோட்டையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அமைச்சர் எஸ். ரகுபதி கூறியதாவது:-
அதிமுகதான் ரகுபதிக்கு அமைச்சர் பதவி வழங்கியது என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். அதிமுகவில் நான் இருந்தபோது எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் விசுவாசமாகத்தான் இருந்தேன். ஜெயலலிதாவை பொதுச்செயலராக ஆக்கியது நாங்கள்தான். இரவு, பகல் பாராது உழைத்திருக்கிறோம்.
அந்த உழைப்புக்காகத்தான் எனக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. நாங்கள் உறங்கவில்லை. அன்றைக்கும் விழித்திருக்கிறோம். இன்றைக்கும் விழித்திருக்கிறோம். ஆனால், எடப்பாடிபழனிசாமிதான் எல்லாவற்றையும் மறந்துவிட்டு தூங்கிக் கொண்டிருக்கிறார்.
மணல் எடுப்பது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. நீதிமன்றத் தீர்ப்பின்படி செயல்படுவோம். எம். சாண்ட், ஜல்லி போன்றவற்றின் விலைகள் ரூ. 5 ஆயிரத்திலிருந்து ரூ. 4 ஆயிரமாகக் குறைக்கச் செய்திருக்கிறோம்.
ஐஏஎஸ் அதிகாரி சகாயம் நீதிமன்றத்தில் காணொலிக் காட்சி மூலமாக ஆஜராகி வாக்குமூலம் வழங்கலாம். அவருக்கு பாதுகாப்பு தேவைப்பட்டால் நிச்சயம் வழங்குவோம். உண்மையைச் சொல்ல வருகிறவர்களை இந்த அரசு பாதுகாக்கும்.
தமிழ்நாட்டில் இருப்பவர்கள், இந்தியாவில் இருப்பவர்கள் யாரும் பாகிஸ்தானை ஆதரிக்கவே மாட்டார்கள். அப்படி ஆதரிப்பவர்கள் இந்தியர்கள் அல்லர். தமிழ்நாட்டிலுள்ள பெண்கள் கைகளில் பணப்புழக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறோம். வேறெந்த மாநிலத்திலும் இதுபோன்ற திட்டங்கள் இல்லை.
திராவிட மாடல் ஆட்சியின் இரண்டாம் பாகம் குறித்து முதல்வர் அறிவித்திருக்கிறார். கடந்த 2021 தேர்தலில் ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லை என்று சொன்னார்கள். கட்டம் சரியில்லை என்று சொன்னவர்களின் கட்டம்தான் சரியில்லாமல் போனது. இரண்டாம் பாகம் எல்லாம் தோல்வியில் போனதாகவும் சொல்கிறார்கள். திராவிட மாடலுக்கு இரண்டாம் பாகம் உண்டு என ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிலேயே மீண்டும் தமிழ்நாட்டை முதலிடத்துக்கு கொண்டு செல்லும் வகையில் அந்த இரண்டாம் பாகம் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.