போர் நிறுத்தம் அறிவித்த 3 மணி நேரத்தில் மீண்டும் அத்துமீறிய பாகிஸ்தான்!

போர் நிறுத்தம் நேற்று மாலை 5 மணிக்கு அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், இரவு 8 மணி அளவில் ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட இந்திய எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதலை தொடங்கியது

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான முழுமையான போர் நிறுத்தம் நேற்று உடனடியாக அமலுக்கு வந்தது. மாலை 5 மணியுடன் இருநாடுகளை சேர்ந்த முப்படைகளும் தாக்குதலை நிறுத்திக்கொண்டதாக இருதரப்பிலும் அறிவிக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பகல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தி சுற்றுலா பயணிகள் 26 பேரை சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய அரசு குற்றம்சாட்டியது. சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்திவைப்பு, அட்டாரி – வாகா எல்லை மூடல்,விசாக்களை ரத்து செய்து பாகிஸ்தானியர்களை வெளியேற்றியது என பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைளை இந்தியா மேற்கொண்டது.

இதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையை இந்தியா முடுக்கி விட்டது. பகல்காம் தாக்குதல் பல பெண்களின் குங்குமம் அழிய காரணமாக இருந்ததால், அதை நினைவுகூரும் விதமாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என இந்த நடவடிக்கைக்கு பெயரிடப்பட்டது. பாகிஸ்தானுக்குள் 9 இடங்களில் செயல்பட்டு வந்த முக்கிய தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அவற்றின் கட்டமைப்புகளை இந்திய ராணுவம் தகர்த்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடுமையாக எதிர்வினையாற்றியது. எல்லை பகுதிகளில் ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலமாக தாக்குதல் நடத்தியது. எனினும், இந்தியா தனது அதிநவீன ஆயுதங்களான எல்-70 பீரங்கி, சில்கா பீரங்கி, எஸ்-400 (சுதர்சன சக்கரம்) உள்ளிட்டவற்றால் கடுமையாக பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் வீசிய ட்ரோன்கள், ஏவுகணைகளை நடுவானிலேயே இடைமறித்து அழித்தது.

அணு ஆயுத நாடுகளான இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்தது உலக நாடுகளை கவலையடைய செய்தது. கடந்த 4 நாட்களாக இருதரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வந்த நிலையில், அமெரிக்காவின் சமாதான முயற்சியால் இந்தியா – பாகிஸ்தான் இடையே நேற்று போர் நிறுத்தம் ஏற்பட்டது. இரு நாடுகளின் முப்படைகளும் நேற்று மாலை 5 மணி முதல் தாக்குதலை நிறுத்திக் கொள்வதென முடிவு செய்யப்பட்டது. போர் நிறுத்தம் குறித்து முதலில் அறிவிப்பு வெளியிட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த முடிவு எட்டப்பட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து ட்ரம்ப் வெளியிட்ட பதிவில், ‘அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இரவு முழுவதும் நடைபெற்ற நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்தியா – பாகிஸ்தான் முழுமையான, உடனடியான போர்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளன. இருநாடுகளின் அறிவார்ந்த செயலையும், அபார புத்திசாலித்தனத்தையும் பாராட்டுகிறேன். இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தியதற்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இசாக் தர் மற்றும் ராணுவ தளபதி ஆசிம் முனிர் ஆகியோரை அமெரிக்க வெளியுறவுதுறை அமைச்சர் மார்கோ ரூபியோ தொடர்பு கொண்டு பேசினார். அதன் பிறகே, ட்ரம்ப் தனது சமூக வலைதளத்தில் போர் நிறுத்தம் குறித்து அறிவித்தார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோ வெளியிட்ட பதிவில், ‘துணை அதிபர் வான்ஸும், நானும் இணைந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனிர், புலனாய்வு தலைவர் ஆசிம் மாலிக் ஆகியோருடன் கடந்த 48 மணி நேரமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். அதன் பிறகே, இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டன. மேலும், இரு நாடுகளும் பொதுவான இடத்தில் பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கும் ஒப்புக்கொள்ளப்பட்டது’ என்று தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு வெளியிட்ட சிறிது நேரத்துக்கு பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் சார்பிலும் போர் நிறுத்தம் குறித்து உறுதி செய்யப்பட்டது.

இதுதொடர்பாக இந்திய வெளியுறவு துறை செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது: இந்தியா மற்றும் பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளுக்கான டைரக்டர் ஜெனரல்கள் (டிஜிஎம்ஓ),நிலம், வான் மற்றும் கடல் வழியாகஅனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் 10-ம் தேதி (நேற்று) மாலை 5 மணி முதல் நிறுத்துவதாக ஒப்புக்கொண்டனர். டிஜிஎம்ஓ-க்கள் இடையிலானபேச்சுவார்த்தை மே 12-ம் தேதி (நாளை) மதியம் 12 மணிக்கு மீண்டும் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

ராணுவ உயர் அதிகாரி ரகு ஆர்.நாயர் கூறும்போது, “பாகிஸ்தானுடன் எட்டப்பட்ட ஒப்பந்தத்தை இந்தியா கடைபிடிக்கும். அதேநேரம், இந்திய ராணுவம் முழுமையான தயார் நிலையிலும் விழிப்புடனும் இருக்கும். இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளோம்’’ என்றார். போர் நிறுத்தத்துக்காக முயற்சி மேற்கொண்ட அமெரிக்காவுக்கு நன்றி கூறுவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்பு, பாகிஸ்தானின் ரஃபிக்கி, முரிட், சக்லாலா, ரஹிம் யார் கான் விமான தளங்கள் உட்பட 8 ராணுவ மையங்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் நேற்று காலை குண்டு வீசின. இதை பாகிஸ்தான் ராணுவத்தால் தடுக்க முடியாமல் பலத்த சேதம் ஏற்பட்டது. பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டதற்கு இந்த தாக்குதலும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இரு நாடுகள் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும், சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தம், பாகிஸ்தான் மீதான வர்த்தக தடை, தூதரக கட்டுப்பாடுகள் ஆகியவை தொடரும். தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று இந்திய தரப்பு நேற்று மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

போர் நிறுத்தம் நேற்று மாலை 5 மணிக்கு அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், இரவு 8 மணி அளவில் ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட இந்திய எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதலை தொடங்கியது. கதுவா, சம்பா, சுந்தர்பானி, அக்னூர், உதம்பூர், நவ்சோரா உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் தாக்கினால் பதிலடி கொடுக்க இந்திய எல்லை பாதுகாப்பு படைக்கு முழு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாபின் பெரோஸ்பூர், ராஜஸ்தானின் ஜெய்சல்மார், பார்மரில் நேற்று இரவும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. ‘ஸ்ரீநகரில் தொடர்ந்து வெடிச் சத்தம் கேட்கிறது. போர் நிறுத்தம் என்ன ஆனது’ என ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். போர் நிறுத்த விவகாரத்தில் பாகிஸ்தான் அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.