பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்பு போராட்டம் ஒத்திவைப்பு!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,019 நாட்களாக நடைபெற்று வந்த பரந்தூர் விமான நிலையத் திட்ட எதிர்ப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக இந்தப் போராட்டத்தை ஒத்திவைப்பதாக போராடக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 13 கிராமங்களை உள்ளடக்கி சென்னையின் 2-வது பசுமை வழி விமான நிலையம் அமைக்கப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளது. இதற்காக சுமார் 5000 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த உள்ளனர். இந்த விமான நிலையத்துக்காக ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் முற்றிலுமாக கையகப்படுத்தப்பட உள்ளதால், இந்த கிராமத்தை மையமாக வைத்து இத் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் 1019 நாளாக நடைபெற்றது.

இந்நிலையில் போராட்டத்தை ஒத்திவைப்பதாக திடீரென்று போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக போராட்டக் குழுவின் தலைவர் ஜி.ரவிச்சந்திரன், செயலர் ஜி.சுப்பிரமணியன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்தை எதிர்த்து ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்கள் ஜனநாயக மாண்பை காக்கும் வகையில் அறவழியில் 1019 நாட்களாக தொடர்ந்து போராடி வருகிறோம் என்பதை அறிவீர்கள். இப்போது நம் நாடு பயங்கரவாத செயலில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. நம்முடைய இந்திய நாட்டின் மீது போர்மேகம் சூழ்ந்து இந்திய திருநாடே அசாதாரண சூழ்நிலையில் உள்ளது. நம்முடைய நாட்டு மக்களும் மிகுந்த கவலையுடன் உள்ளனர். இந்த போர்கால சூழ்நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகளை எதிர்த்து போராடுவது போராளிகளுக்கு அழகல்ல. பரந்தூர், ஏகனாபுரம் பகுதி விவசாய மக்களும் நம்முடைய தாய்நாட்டின் மீது போர் திணிக்கப்பட்டுள்ளதை கண்டு மிகுந்த மனகவலையில் உள்ளனர்.

எங்கள் காஞ்சியில் பிறந்த பேரறிஞர் அண்ணா கூறியது போல, “வீடு இருந்தால் தான் கூரை வேய முடியும்”. அது போல் நாடு இருந்தால் தான் கிராமத்தைக் காக்கப் போராட முடியும். பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்தை எதிர்த்து போராடுகின்ற விவசாய மக்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் மூலம் இதுவரை போராடுகின்ற மக்களுக்கு நியாயம் கிடைக்கவில்லையே என்ற கோபம் ஒரு துளியும் குறையாமல் உள்ளது.

ஆனாலும் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பரந்தூர் புதிய விமான நிலைய திட்ட எதிர்ப்பு மாலை நேர போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பது என தீர்மானித்துள்ளோம். நம் இந்திய திருநாட்டில் அமைதியான சூழ்நிலை ஏற்படும் போது பரந்தூர்புதிய விமான நிலைய திட்ட எதிர்ப்பு போராட்டம் மீண்டும் அதே எழுச்சியுடன் தொடங்கப்படும்.

அதே நேரம் விமான நிலைய திட்டத்தின் மீது மத்திய மற்றும் மாநில அரசுகளின் நடவடிக்கைகள் குறித்து விவசாய மக்களிடம் கருத்துக்களை தொடர்ந்து பகிரும் வகையில் போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை செயல்படுத்துவது குறித்த கூட்டம் பிரதி வாரம் புதன்கிழமை இரவு 8 மணியளவில் வழக்கம்போல் நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.