திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், “டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்; தற்காலிகமாக அல்ல” என தெரிவித்தார்.
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவனிடம் இந்தியா – பாகிஸ்தான் விவகாரத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளதே என்ற செய்தியாளரின் கேள்விக்கு, ”தற்போது நாம் எந்த கருத்து சொன்னாலும், அதை சில இந்துத்துவ செயல்திட்டத்தை நடைமுறைபடுத்தும் நபர்கள் எதிராக பார்க்கிறார்கள்” என்றார் இங்கு இந்துத்துவ அரசியல் செயல்திட்டம் என்பது அகண்டபாரதம் அமைப்பதை குறிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
பாமக-திமுக கூட்டணி குறித்த கேள்விக்கு கருத்து தெரிவித்த திருமாவளவன், “பாமக வருவது குறித்து பேச்சு வந்தால், அதை அப்போது பார்த்துக்கொள்ளலாம்,” என்று கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் நடந்த தேர் வடம் தொடர்பான மோதல் குறித்து எழுந்த புகாருக்கு பதிலளித்த திருமாவளவன், தான் தவறான தகவல் பரப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்தார். அவர் கூறுகையில், “பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தான் நான் கருத்து தெரிவித்தேன். தலித் மக்கள் முத்துமாரியம்மன் தேர் திருவிழாவில் சாமி கும்பிடச் சென்றபோது, தேர் வடத்தைத் தொடுவது அவர்களின் பாரம்பரிய உரிமை என்று நான் கூறவில்லை. ஆனால், தேர் வடத்தைத் தொடுவது எல்லோருக்குமான உரிமை. தலித் மக்கள் சென்றபோது அவர்கள் விரட்டப்பட்டு தாக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது,” என்றார்.
அவர் மேலும், காவல்துறை இந்த சம்பவத்தை மறைக்க முயன்று, பெட்ரோல் பங்கில் இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு என்று தவறாகக் கூறியதாக விமர்சித்தார். “இது அடைக்கலம் தந்த ஐய்யனார் கோவில் தொடர்பான முன்பகை மற்றும் நில விவகாரம் காரணமாக ஏற்பட்ட பிரச்சனை. இதை தேர் வடத்தைத் தொட்டதால் ஏற்பட்ட பகை என்று நான் கூறவில்லை,” என்று தெளிவுபடுத்தினார். தனது அறிக்கை தவறாக இருந்தால், அதைத் திருத்திக்கொள்ளத் தயார் என்றும் அவர் கூறினார்.