பாகிஸ்தான் உடன் இந்தியா போர் நிறுத்தம் செய்தது தவறு என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சமீபத்திய மோதலுக்கு அமெரிக்காவின் தலையீட்டால் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை விமர்சித்துள்ளார். இந்தியா இதற்கு ஒப்புக்கொண்டது தவறு என்றும், அமெரிக்காவுக்கு இதில் தலையிட எந்த உரிமையும் இல்லை என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
சுப்பிரமணிய சுவாமி தனது பேட்டியில், இந்தியா-பாகிஸ்தான் மோதல் தொடர்பான முடிவுகளை இரு நாடுகளே எடுக்க வேண்டும். அமெரிக்கா போர் நிறுத்தத்தை அறிவித்து, பாகிஸ்தானும் அதைத் தொடர்ந்து, இந்தியாவும் ஒப்புக்கொண்டது வரலாற்றில் வழக்கத்திற்கு மாறானது என்று அவர் விமர்சித்தார். “அமெரிக்காவுக்கு இங்கு என்ன வேலை? அவர்களுக்கு நாம் ஏன் மதிப்பு கொடுக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பிய அவர், 26/11 மும்பை தாக்குதல் போன்ற சம்பவங்களின்போது அமெரிக்கா உதவிக்கு வரவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
புல்வாமா மற்றும் பகல்காம் தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்துரை போன்ற நடவடிக்கைகளை மேற்கோள் காட்டிய அவர், பாகிஸ்தானுக்கு “நல்ல அடி” கொடுத்த பின்னரே பேச்சுவார்த்தைக்கு இடமளித்து இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த விவகாரத்தில் இந்தியா தவறு செய்ததாகவும், இனி இதுபோன்ற முடிவுகளை எடுக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.
பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது தொடர்ந்து நடப்பதாகவும், இதற்கு பாகிஸ்தான் அரசே பொறுப்பு என்றும் சுவாமி குற்றம்சாட்டினார். “பாகிஸ்தானுக்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும். அவர்களின் ராணுவத்தை உடைத்து, பின்னர் பேச்சுவார்த்தை நடத்தலாம்,” என்று அவர் தெரிவித்தார். மற்ற நாடுகள், குறிப்பாக சீனா அல்லது அமெரிக்கா, இந்த விவகாரத்தில் தலையிடுவதை இந்தியா அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார்.
சண்டை நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, தற்போது இரு நாடுகளும் ராணுவ அளவிலான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக இல்லை என்று குறிப்பிட்ட சுவாமி, பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் தேவை என்று வலியுறுத்தினார். “பயங்கரவாதிகளை அனுப்பி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானுக்கு தண்டனை கொடுக்காமல், சமாதானத்திற்கு இடமில்லை” என்று அவர் கூறினார்.