பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும்: பாமக மாநாட்டில் தீர்மானம்!

பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் என்று பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை பகுதியில், சித்தரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு மாலை 4 மணி அளவில் பாமக நிறுவனர் ராமதாஸ் வருகை தந்தார். அதனைத் தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் வருகை தந்தனர். 12 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்து இருந்தனர். அறிவித்தபடி மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு குழுக்களின் ஆடல், பாடல் என கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் நிகழ்ச்சிகளை பார்க்கும் வண்ணம், எல்இடி திரைகள் பொருத்தப்பட்டு இருந்தன. குடிநீர்,கழிப்பிட வசதி, மருத்துவக் குழுக்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன.

இந்தநிலையில், பகல்காம் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த 26 பேருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மாநாட்டு திடலில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள வன்னியர் சங்க கொடியை ராமதாஸ் ஏற்றி வைத்தார். பின்னர். பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

* வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு 10.5 சதவீதத்தை சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின் அடிப்படையில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

* அனைத்து சமுதாயத்தினருக்கும் அவர்களது மக்கள் தொகைக்கு இணையாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

* பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை மக்கள் தொகைக்கு ஏற்ப 2 சதவீதம் உயர்த்த வேண்டும்.

* மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும்.

* கிரீமிலேயர் முறையை உடனடியாக நீக்க வேண்டும்.

* தனியார் துறையில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்.

* அரசுத்துறையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்.

* சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு பணிகளில் இட ஒதுக்கீட்டை கட்டாயமாக்க வேண்டும்.

* பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கிட வழங்க வேண்டும்.

* சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்த இந்திய பிரதமர் மோடிக்கு இம்மாநாடு நன்றி தெரிவித்தது. ஆகியவை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.