பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகிறது!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக உள்ளது. இந்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். சாட்சி விசாரணைகள் முடிவடைந்த நிலையில் கோவை மகளிர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கிறது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏராளமான கல்லூரி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இளம்பெண்களைக் குறி வைத்து பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டிய கும்பலின் கொடூரம் பெண் ஒருவரின் புகாரின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது.

பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில், சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், ஹேரன்பால், பாபு, அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் கோவை மகளிர் நீதிமன்றத்தில் இது சிறப்பு வழக்காக நடத்தப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், கோவை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முழுவதும் வீடியோ கான்பரன்சிங் முறையில் நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையில் ஆஜராகும் சாட்சிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனைவரும் மூடப்பட்ட நீதிமன்ற அறைகளில் விசாரணையில் பங்கெடுத்தனர்.

9 பேர் மீது 2019 மே 21ஆம் தேதி கோவை மகளிர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதன்பிறகு வழக்கு விசாரணை தாமதம் ஆனது. அதைத்தொடர்ந்து உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் கோவை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் தனியாக அறை ஒதுக்கி விசாரணை தொடங்கப்பட்டது. இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சி விசாரணை முடிந்த நிலையில், இதுதொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் கேள்விகள் கேட்பதற்காக, 9 பேரும் மகளிர் நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியங்கள் முடிவடைந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் தரப்பில் விசாரணை நடைபெற்றது. இதில் குற்றம்சாட்டப்பட்ட ஒவ்வொரு நபரிடமும் சுமார் 50 கேள்விகள் வரை கேட்கப்பட்டது. சாட்சி விசாரணைகள் முடிவடைந்து இறுதிக்கட்டமாக அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து பொள்ளாச்சி காவல் உதவி ஆய்வாளர், பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மருத்துவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து வழக்கறிஞர்கள் இடையே குறுக்கு விசாரணையும் நடைபெற்றது. சாட்சி விசாரணைகள் முடிவடைந்த நிலையில் மே 13ஆம் தேதி பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு வெளியாகும் என கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார். அதன்படி நாளை இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாக இருக்கிறது.

தீர்ப்பு அறிவிக்கப்படும் என உத்தரவிடப்பட்டு இருப்பதால் குற்றவாளிகள் அனைவரும் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். தீர்ப்பு விவரங்களை நாளை காலையோ அல்லது மதியத்துக்கு பிறகோ நீதிபதி அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.