பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை!

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்றும், கூட்டு பாலியல் வன்கொடுமை நிரூபணம் ஆகியுள்ளது என்றும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அவர்கள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடி உத்தரவிட்டார்.

பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்த நிலையில், கோவை மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. அண்ணா அடிக்காதீங்க என்ற இளம்பெண்ணின் அலறல் சத்தம் அடங்கிய வீடியோ தமிழ்நாட்டையே நடுங்க செய்திருந்தது. இன்று தீர்ப்பு என்பதால் கோர்ட் வளாகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு இன்று அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து உயர் நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தீர்ப்பு அளித்தார். 9 பேரும் குற்றவாளிகள் எனவும், கூட்டு பாலியல் வன்கொடுமை நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், அவர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாகவும் தீர்ப்பளித்தார்.

முன்னதாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நாட்டையே உலுக்கும் வகையில் அதிர்ச்சிகரமான ஒரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அதாவது, கல்லூரி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இளம்பெண்களைக் குறி வைத்து பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டிய கும்பலின் கொடூரம் நடைபெற்றது. கோவை பொள்ளாச்சி வழக்கு இளம் பெண் ஒருவரின் புகாரின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு ஒப்படைத்தது.

இந்த வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த சபரிராஜன் (வயது 30), வசந்தகுமார் (32), சதீஷ் (33), மணிவண்ணன் (30), திருநாவுக்கரசு (30), ஹேரேன் பால் (34), பாபு என்ற பைக் பாபு (38), அருளானந்தம் (38), அருண்குமார் (36) என மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் சிறப்பு வழக்காக நடத்தப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கோவை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முழுவதும் காணொலி முறையில் நடத்தப்பட்டு வந்தது. குற்றம் சாட்டப்பட்ட 9 பேர் மீதும் 2019 மே 21ஆம் தேதி கோவை மகளிர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் வழக்கின் விசாரணை தாமதம் ஆனதால், உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து, கோவை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் தனியாக அறை ஒதுக்கி விசாரணை தொடங்கப்பட்டது.

இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சி விசாரணை முடிந்ததையடுத்து, இதுதொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் கேள்விகள் கேட்பதற்காக, 9 பேரும் மகளிர் நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியங்கள் முடிவடைந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் தரப்பில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிந்த நிலையில், மே 13 (இன்று) தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்தது. இதன்படி, இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

உயர் நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தீர்ப்பு அளித்தார். அப்போது அவர் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரூம் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது நிரூபிக்கப்பட்டுள்ளது. 9 பேரும் குற்றவாளிகள் எனவும் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது நிரூபணம் ஆகியுள்ளது. குற்றவாளிகளுக்கு சாகும் வரை தண்டனை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.

எதிர்த் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், குற்றம் சுமத்தப்பட்டவர்கள் இளம் வயதினராக இருப்பதனாலும், திருமணம் ஆகாதவர்கள் என்பதாலும் தண்டனையை குறைத்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும் குற்றம் சாட்டப்பட்டுள்ள இளைஞர்களின் தாய் தந்தை வயதானவர்களாக இருக்கிறார்கள், அவர்களை கவனிக்க வேண்டும் என்பதால் தண்டனையை குறைத்து வழங்க கோரிக்கை வைத்தனர். இன்று மதியம் 12.00 மணிக்கு நீதிபதி நந்தினி தீர்ப்பின் தண்டனை விவரங்களை வெளியிட்டார். அதில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நிதிபதி உத்தரவிட்டார்.

குற்றவாளிகளுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும், ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை இழப்பீடு வழங்க கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தீர்ப்பு குறித்து சிபிஐ வழக்குரைஞர் சுரேந்திர மோகன் கூறுகையில், மேல்முறையீடு சென்றாலும் இந்த தீர்ப்பு உறுதி செய்யப்படும் என்று நம்புகிறோம். பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும். ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை இழப்பீடு வழங்க தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் முதல் குற்றவாளி சபரிராஜனுக்கு 4 ஆயுள் தண்டனையும், திருநாவுக்கரசுக்கும் ஐந்தாவது குற்றவாளி மணிவண்ணனுக்கும் தலா 5 ஆயுள் தண்டனையும், மூன்றாவது குற்றவாளி சதீஷ்-க்கு 3 ஆயுள் தண்டனையும், 6வது குற்றவாளி பாபு, 8வது குற்றவாளி அருளானந்தம் மற்றும் 9-வது குற்றவாளி அருண்குமார் ஆகியோருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனையும், குற்றவாளி வசந்தகுமாருக்கு 2 ஆயுள் தண்டனையும், ஹரன்பால்-க்கு 3 ஆயுள் தண்டனையும் பிறப்பித்து நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்துள்ளார். சாகும்வரை ஆயுள் தண்டனை என்றால், ஒரு ஆயுள் தண்டனையோ, ஐந்து ஆயுள் தண்டனையோ ஒன்றுதான் என்றும் விளக்கம் கொடுத்துள்ளார்.