பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்துக்குச் சென்று வீரர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இதுபோன்ற பதில் தாக்குதல் இனி இந்தியாவின் புதிய வழக்கமாக இருக்கும் என கூறினார்.
ஆதம்பூர் விமான தளத்தில் வீரர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, அவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் ஈடுபட்ட வீரர்கள் இந்தியாவின் எதிர்கால சந்ததியினருக்கு ஓர் உத்வேகமாக மாறிவிட்டனர். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது அனைத்து இந்தியர்களும் வீரர்களுடன் நின்று அவர்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்தனர்.
ஆபரேஷன் சிந்தூர் ஒரு வழக்கமான ராணுவ நடவடிக்கை அல்ல. இது இந்தியாவின் கொள்கை, நோக்கம் மற்றும் தீர்க்கமான வலிமையின் உருவகமாகும். பயங்கரவாதிகள் கோழைகளைப் போல நாட்டுக்குள் வந்தனர், ஆனால் அவர்கள் இந்திய ராணுவத்துக்கு சவால் விடுத்ததை மறந்துவிட்டனர். நீங்கள் அவர்களை நேரடியாக, முன்பக்கத்திலிருந்து தாக்கினீர்கள். பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை ரத்தம் சிந்த வைத்தால் அது அழிவை மட்டுமே அழைக்கும் என்பதை ஆபரேஷன் சிந்தூர் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த பயங்கரவாதிகளின் ஆதரவை நம்பியிருந்த பாகிஸ்தான் ராணுவத்தையும் இந்திய ராணுவம் தோற்கடித்துவிட்டது.
ஆபரேஷன் சிந்தூர் மூலம், இந்த நாட்டின் தன்னம்பிக்கையை நீங்கள் அதிகரித்துள்ளீர்கள். பாகிஸ்தானில் ஆழமாக வேரூன்றிய பயங்கரவாத முகாம்களை நமது விமானப்படை குறிவைத்தது. நவீன தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட ஒரு தொழில்முறை படையால் மட்டுமே இந்த இலக்குகளை இவ்வளவு துல்லியமாகக் கண்டறிந்து தாக்க முடியும். பாகிஸ்தானை இந்தியாவின் ஏவுகணைகள் தூங்க விடவில்லை.
பாகிஸ்தான் தனது வான்வெளியில் பொதுமக்கள் பயணிக்கும் விமானங்களை பறக்கவிட்டது. நமது வீரர்களுக்கு இது ஒரு கடினமான தருணமாக இருந்திருக்கும். பயணிகள் விமானங்களை சேதப்படுத்தாமல் இந்திய ஆயுதப் படைகள் தங்கள் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றின. நமது விமான தளங்களை அழிக்க எதிரி எடுத்த ஒவ்வொரு முயற்சியும் பயனற்றதாகியது. பாகிஸ்தானின் ட்ரோன்கள், அவர்களின் யுஏவி (UAV), விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் அனைத்தும் நமது வான் பாதுகாப்பு கட்டமைப்பால் முறியடிக்கப்பட்டன.
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் லட்சுமண ரேகை இப்போது தெளிவாக உள்ளது. பயங்கரவாதத்தின் ஒவ்வொரு செயலும் வலிமையால் எதிர்கொள்ளப்படும். ஆபரேஷன் சிந்தூர் இனி இந்தியாவின் புதிய வழக்கமாக இருக்கும். பிரதமர் மோடி கூறினார்.
முன்னதாக, ஆதம்பூர் விமானப்படைத் தளத்துக்குச் சென்றது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, “இன்று அதிகாலையில், நான் ஏஎஃப்எஸ் ஆதம்பூருக்குச் சென்று நமது துணிச்சலான விமானப்படை வீரர்களைச் சந்தித்தேன். தைரியம், உறுதிப்பாடு மற்றும் அச்சமின்மை ஆகியவற்றை வெளிப்படுத்துபவர்களுடன் இருப்பது மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. நமது ஆயுதப்படைகள் நமது தேசத்துக்காகச் செய்யும் அனைத்துக்கும் இந்தியா என்றென்றும் நன்றியுடன் இருக்கிறது” என்று தெரிவித்திருந்தார்.