தூய்மைப் பணியாளர்களை தொழில்முனைவர்களாக மாற்றும் திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில், யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது:-
தூய்மைப் பணியாளர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் அவர்களை தொழில்முனைவோர்களாக மாற்றுவதற்கான அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. அதேபோல, துாய்மை பணியாளர்களுக்கு 50 சதவீத மானியத்துடன் நவீன கழிவுநீர் அகற்றும் ஊர்திகள், உபகரணங்கள் வழங்கும் மத்திய அரசின் ‘நமஸ்தே திட்டம்’ அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களை செயல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்துள்ளன.
இந்த திட்டங்களை அமல்படுத்தும் பணிகள் சட்டவிரோதமாக தலித் இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபை என்ற தனியார் அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முக்கியப் பங்கு வகித்துள்ளார். தூய்மைப் பணியாளர்களுக்கு அதிகாரம் வழங்க ஒதுக்கப்பட்ட பெருந்தொகை உண்மையான பயனாளிகளுக்கு சென்று சேரவில்லை.
இந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தியதற்காக தூய்மை பணியாளர்கள் உடையில் வந்த சமூக விரோதிகள் தனது வீட்டில் கழிவு நீரைக் கொட்டி வன்முறையில் ஈடுபட்டனர். இந்த முறைகேடு தொடர்பாக புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தனது புகாரின் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு, விடுமுறை கால அமர்வில் நாளை (மே 14) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.