பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்புக்கு உதயநிதி ஸ்டாலின் வரவேற்பு!

அதிமுக ஆட்சியின்போது நடந்த பெண்களுக்கு எதிரான இந்தக் கொடூரம் தமிழ்நாடு வரலாற்றில் ஒரு கருப்பு பக்கம் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

பொள்ளாச்சியில் நடந்த கூட்டு பாலியல் வழக்கு தமிழகத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்குகளில் ஒன்று. ஒரு கல்லூரி மாணவி மற்றும் பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்தப்பட்டனர். இந்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது. இந்த வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொண்டு திருநாவுக்கரசு (வயது 25), சபரிராஜன் (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27), மணிவண்ணன் (28), ஹெரன்பால் (29), பாபு (27), அருளானந்தம் (34) மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

இந்த வழக்குக்கான தீர்ப்பை நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார். அதில் பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று அறிவித்தார். குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் என வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்த தீர்ப்பை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-

இன்று நினைத்தாலும் மனம் பதைபதைக்கும் பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை கிடைத்திருக்கிறது.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது நடந்த பெண்களுக்கு எதிரான இந்தக் கொடூரம் தமிழ்நாடு வரலாற்றில் ஒரு கருப்பு பக்கம். குற்றவாளிகளை காப்பாற்ற நடந்த முயற்சிகளை அன்று எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.கழகம், மக்களின் துணையோடு முறியடித்ததே பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இன்றைக்கு நீதி கிடைக்க காரணம்! இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.