வன்னியர் இளைஞர் மாநாடு தேர்தல் கூட்டணிக்காக நடத்தப்படவில்லை: அன்புமணி!

மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பாமக மாநாட்டின் மூலம் அப்பகுதியில் குவிந்த குப்பையை அகற்றும் தூய்மை பணிகளில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் ஈடுபட்ட நிலையில், கூட்டணிக்காக மாநாட்டை நடத்தவில்லை என அன்புமணி தெரிவித்தார்.

மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெற்றது. இந்நிலையில், திருவிடந்தை மாநாட்டு திடலுக்கு நேற்று வருகை தந்த பாமகவின் தலைவர் அன்புமணி தூய்மை பணியில் ஈடுபட்டார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

மாநாடு மிக சிறப்பாக நடைபெற்றது. சமீப காலத்தில், தமிழ்நாட்டில் இப்படி ஒரு மாநாடு நடைபெறவில்லை என அனைத்து பொதுமக்களும், அனைத்து கட்சியினரும் கூறுகின்றனர். அந்த வகையில் சுமார் 15 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.மேலும், மாநாட்டை அனைத்து நிலை நிர்வாகிகளும் சிறப்பாக நடத்தினர்.

இந்த மாநாட்டில் பல மாநிலம், பல நாடுகளில் இருந்தும் கலந்து கொண்டனர். மாநாட்டுக்கு பிறகு இந்த பகுதியின் சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என நாங்களே சுத்தம் செய்துவருகிறோம். இரண்டு நாட்களில் அனைத்து குப்பையையும் அகற்றி சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன.

இந்த மாநாட்டின் நோக்கம் சமூகநீதி, தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு பாதுகாக்க வேண்டும். தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு சர்வே எடுக்க வேண்டும். இல்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். இந்த மாநாட்டில் சிறு பிரச்சினை இல்லாமல் வெற்றிகரமாக நடத்த உதவிய தமிழக அரசு மற்றும் காவல்துறை, ஊடக்கத்தினருக்கு நன்றி. எனினும், கூட்டணிக்காக இந்த மாநாட்டை நடத்தவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.