போர் நிறுத்தம் பற்றிய ட்ரம்ப் கருத்துக்கு மோடி பதிலளிக்காதது ஏன்?: காங்கிரஸ்!

இந்தியாவும் பாகிஸ்தானும் ராணுவ மோதலை நிறுத்தாவிட்டால், இரு நாடுகளுடனான வர்த்தகத்தை அமெரிக்கா நிறுத்தும் என அச்சுறுத்தியதை அடுத்தே மோதல் முடிவுக்கு வந்ததாக டொனால்ட் ட்ரம்ப் கூறியது பற்றி பிரதமர் நரேந்திர மோடி அமைதி காத்தது ஏன் என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் ராணுவ மோதல் முடிவுக்கு வந்துவிட்டதாக முதலில் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்தவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். இரவு முழுவதும் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த முடிவு எட்டப்பட்டதாக அவர் கூறி இருந்தார்.

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய டொனால்டு ட்ரம்ப், “இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் சார்ந்து அமெரிக்க அரசு நிர்வாக ரீதியாக முக்கிய பங்காற்றியது. இரு தரப்புக்கும் வர்த்தக ரீதியான அழுத்தம் கொடுத்து போரை தவிர்க்கச் செய்தோம். இந்தப் போர் நிறுத்தம் நிரந்தரமானதாக இருக்கும் எனக் கருதுகிறேன். சனிக்கிழமை அன்று இதை செய்தோம். இதன் மூலம் அணு ஆயுதங்களை அதிகம் கொண்டுள்ள நாடுகளான இந்தியா – பாகிஸ்தான் இடையே போரை தடுத்து நிறுத்தினோம். அது நடக்காமல் போயிருந்தால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். இந்த மோசமான மோதலை அமெரிக்கா தவிர்க்கச் செய்துள்ளது. அதை எண்ணி பெருமை கொள்கிறேன். இந்தியா – பாகிஸ்தான் இடையே அதிக அளவில் வர்த்தகம் மேற்கொள்ள உள்ளோம். இது தொடர்பாக இந்தியாவுடன் பேசி வருகிறோம். விரைவில் பாகிஸ்தான் உடன் பேசுவோம்.” என தெரிவித்திருந்தார்.

இதையடுத்து நேற்று இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த கருத்து பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. இதை சுட்டிக்காட்டியுள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ், “பிரதமரின் மிகவும் தாமதமான உரை, சில நிமிடங்களுக்கு முன்பு அதிபர் ட்ரம்ப் தெரிவித்த கருத்துக்கு முற்றிலும் மாறாக உள்ளது. ட்ரம்ப் கூறியது பற்றி பிரதமர் முற்றிலும் அமைதியாக இருந்தார். அமெரிக்காவின் மத்தியஸ்தத்திற்கு இந்தியா ஒப்புக்கொண்டதா? பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைக்கான ‘மத்தியஸ்தத்துக்கு’ இந்தியா ஒப்புக்கொண்டதா? ஆட்டோமொபைல்கள், விவசாயம் மற்றும் பிற துறைகளில் இந்திய சந்தைகளைத் திறப்பதற்கான அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு இந்தியா இப்போது அடிபணியுமா?” என்று தனது எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பி இருந்தார்.

மேலும் அவர், பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். “வரவிருக்கும் மாதங்கள் கடினமான ராஜதந்திரத்தையும் கூட்டுத் தீர்மானத்தையும் கோரும். நமது ஆயுதப் படைகளை நாங்கள் நிபந்தனையின்றிப் பாராட்டுகிறோம், வணங்குகிறோம். அவர்கள் நாட்டைப் பெருமைப்படுத்தியுள்ளனர். நாங்கள் எல்லா நேரங்களிலும் அவர்களுடன் 100% இருக்கிறோம். ஆனால் பிரதமர் இன்னும் நிறைய பதிலளிக்க வேண்டும்.” என்று ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் திருவனந்தபுரம் எம்பியுமான சசி தரூரின் கருத்துக்கள், ஜெயராம் ரமேஷின் கருத்தோடு முரண்பட்டிருந்தது. இது குறித்து சசி தரூர், “ஒரு குறிப்பிட்ட அரசியல்வாதி(டொனால்ட் ட்ரம்ப்) ஏதோவொன்றிற்கான பெருமையைப் பெற விரும்புவதாக நான் இதைப் பார்க்கிறேன். ‘அவர்கள் விரும்பினால் பெருமையைப் பெறட்டும்’ என்று இந்திய அரசு கூறியிருக்கலாம் என்று என்னால் பார்க்க முடிகிறது. ஆனால் நமது பார்வையில், பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் (DGMO) தனது இந்தியப் பிரதிநிதியை பிற்பகல் 3:35 மணிக்கு அழைத்ததன் பேரில்தான் அமைதி ஏற்பட்டது என்பதை நாம் தெளிவுபடுத்தியுள்ளோம். ஆம் என்று சொல்ல நாம் அதிக நேரம் எடுத்துக்கொள்ளவில்லை – ஏனென்றால் நாம் ஒருபோதும் ஒரு நீண்ட போரை விரும்பவில்லை. பகல்காமுக்கு பழிவாங்கும் விதமாக பயங்கரவாத இலக்குகளைத் தாக்குவதே நமது நோக்கம் என்பதை மே 7 அன்று மிகத் தெளிவாகக் கூறியிருந்தோம்” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.