“தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தவிர்க்க முடியாதவர்” என்று, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.வைத்திலிங்கம் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம், சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று (மே 14) தொடங்கியது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 19 மாவட்ட செயலாளர்கள் மற்றும் புதுச்சேரி மாநில நிர்வாகிகள் ஆகியோருடன் தனித்தனியாக பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக, 2026 தேர்தலுக்கு தயாராவது தொடர்பாக, அனைவரிடமும் படிவங்கள் வழங்கப்பட்டு எழுத்து வடிவில் கருத்துகள் பெறப்பட்டன. அதனைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், முன்னாள் அமைச்சர்கள் ஆர்.வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ ஆகியோர் மாவட்ட செயலாளர்களிடம் கருத்துகளை கேட்டறிந்தனர்.
அப்போது, பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள், “அதிமுகவை ஒருங்கிணைத்து 2026 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க வேண்டும். இல்லையெனில், நடிகர் விஜய்யின் தவெக உடன் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும்” என தங்கள் விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
உணவு இடைவேளையில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.வைத்திலிங்கத்திடம், அதிமுக–பாஜக கூட்டணி உருவான பிறகு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உங்களுக்கு முக்கியத்துவம் உள்ளதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “அக்கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் தவிர்க்க முடியாதவர். இந்த ஆய்வுக் கூட்டம் மற்றும் கூட்டணி தொடர்பாக பன்னீர்செல்வம் நாளை அறிவிப்பார்” என தெரிவித்தார்.
நாளை (மே 15) நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில், திருச்சி, சேலம், ஈரோடு உள்ளிட்ட 19 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்று கருத்துகளைத் தெரிவிக்க உள்ளனர்.