தீவிரவாத தாக்குதல் இனியும் நடந்தால் உலக வரைபடத்தில் பாகிஸ்தான் இருக்காது: நயினார் நாகேந்திரன்!

தீவிரவாத தாக்குதல் இனியும் நடந்தால் உலக வரைபடத்தில் பாகிஸ்தானை மோடி இல்லாமல் ஆக்கிவிடுவார் என நயினார் நாகேந்திரன் கூறினார்.

பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலில் வெற்றி கண்ட வீரர்களுக்கும், வெற்றிக்கு வித்திட்ட பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் தமிழக பாஜக சார்பில் ‘மூவர்ண கொடி பேரணி’ சென்னை புதுப்பேட்டையில் நேற்று நடைபெற்றது. இந்த பேரணிக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் மாநில தலைவர் தமிழிசை, தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா, துணை தலைவர்கள் கரு.நாகராஜன், டால்பின் ஸ்ரீதர், நாராயணன் திருப்பதி, மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத், விளையாட்டு பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் உட்பட பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த என்எஸ்எஸ், என்சிசி மாணவர்கள், பொதுமக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

புதுப்பேட்டை சித்ரா தியேட்டர் அருகில் நேற்று மாலை தொடங்கிய பேரணி எல்ஜி சாலை வழியாக சென்று இறுதியில் எழும்பூர் ஆல்பர்ட் தியேட்டர் ரவுண்டானா அருகில் முடிவடைந்தது. பேரணியின்போது, அனைவரும் தேசிய கொடியை கைகளில் ஏந்தியவாறு ராணுவ வீரர்களுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் கோஷங்களை எழுப்பினர்.

பேரணியின் முடிவில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:-

பிரதமர் மோடி 2 பெண்கள் மூலம் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தியுள்ளார். பாகிஸ்தான் வாலாட்டுவதற்கு இங்கு நடப்பது ஒன்றும் காங்கிரஸ் ஆட்சி அல்ல. பாஜகவின் ஆட்சி. மோடியின் ஆட்சி. யாரிடம் வேண்டுமானாலும் பாகிஸ்தான் வாலாட்டலாம். நரேந்திர மோடியிடம் மட்டும் வாலாட்டினால், வாலை ஒட்ட நறுக்கிவிடுவது மட்டுமல்ல, பாகிஸ்தானுக்கு குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்காது.

மொழியாலும், இனத்தாலும் இந்தியாவை பிளவுப்படுத்த நினைத்தால் அவர்களுக்கு ட்ரோன் மூலம் குண்டுகள் மட்டுமே கிடைக்கும். இந்த போர் தொடங்கி 15 நாட்களில் பாஜகவுக்கு மக்களின் ஆதரவு மேலும் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. அன்று கார்கில் போரில் வாஜ்பாய் வென்றார். இன்று பாகிஸ்தானை வெல்ல போகிறார் மோடி. இனி இதுபோல் நடந்தால் உலக வரைபடத்தில் இருந்து பாகிஸ்தான் இல்லாமல் போகும். அதை மோடி செய்துகாட்டுவார். இவ்வாறு அவர் பேசினார்.

எச்.ராஜா பேசும்போது, ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவானதுக்கு காரணம் அப்போதையை பிரதமர்களாக இருந்த நேருவும், இந்திரா காந்தியும் தான். இவர்கள் செய்த தவறினால் இன்று மோசமான சூழ்நிலை உருவாகி உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை எப்போது இந்தியாவிடம் ஒப்படைப்பீர்கள். தீவிரவாதத்தை எப்போது நிறுத்துவீர்கள். இவை மட்டுமே இனி பேச்சுவார்த்தையின் மையமாக இருக்கும்’ என்றார்.

தமிழிசை பேசும்போது, ‘இந்த தீவிரவாத தாக்குதலில் பிரதானமாக உபயோகப்படுத்தப்பட்டது, இந்தியாவில் உற்பத்தியான ராணுவ தளவாடங்கள் தான். காங்கிரஸ் ஆட்சியில் 86 தீவிரவாத தாக்குதல் நடந்திருக்கிறது. ஒரு தாக்குதலுக்கு கூட திருப்பி அடிக்கவில்லை. ஆனால், நாம் திருப்பி அடிக்கும் பிரதமரை பெற்றிருக்கிறோம்,’ என்றார்.