நெல் கொள்முதலில் அரசு நிதி ரூ.170 கோடி முறைகேடு: பி.ஆர்.பாண்டியன்!

நெல் கொள்முதலில் தனியாருக்கு அனுமதி வழங்கியதால் அரசு நிதி ரூ.170 கோடி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர் பாண்டியன் கூறினார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பி.ஆர். பாண்டியன் கூறியதாவது:-

தமிழகத்தில் நெல் கொள்முதல் நிலையங்களை திமுக அரசு தனியாருக்கு தாரை வார்த்தது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், டெல்டா மாவட்டங்களில் இத்திட்டம் கைவிடப்பட்டது. ஆனால், மற்ற மாவட்டங்களில் அனுமதி வழங்கப்பட்டது. இதை எதிர்த்து, தமிழகம் முழுவதும் போராட்டத்தை தீவிரப்படுத்தினோம்.

இந்நிலையில், தமிழகத்தில் விவசாய உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நடத்துவதாக கூறி, மத்திய அரசின் நுகர்வோர் கூட்டுறவு அமைப்பில் அனுமதி பெற்று, தமிழக அரசிடம் நெல் கொள்முதல் செய்வதற்கு தனிநபர் ஒருவர் அனுமதி பெற்றுள்ளார். இவரது நிறுவனத்துக்கு நெல் கொள்முதலில் முன் அனுபவம் கிடையாது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கொள்முதல் பணியாளர்கள், கட்டமைப்புகளை பயன்படுத்தி, அவரது வங்கிக் கணக்கின் மூலம் பணம் பெற்று விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்வதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் முதல்கட்டமாக ரூ.170 கோடி முன்பணம் பெற்று முறைகேடு நடந்துள்ளதாகத் தெரிகிறது. விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல்லுக்கான தொகை வழங்கப்பட்டதற்கான கணக்கீடுகளையும் தமிழக அரசுக்கு தெரிவிக்கவில்லை. இதனால் பெரிய ஊழல் நடந்துள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அந்நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்ட கொள்முதல் அனுமதியை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. இதனால், கொள்முதல் செய்த நெல்லுக்கு உரிய தொகை கேட்டுப் போராட வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள், ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நெல் கொள்முதலுக்கு தனியாருக்கு அனுமதி வழங்கிய தமிழக முதல்வர், இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும். உரிய நடவடிக்கை எடுத்து, விவசாயிகளுக்கு உரிய தொகை கிடைக்க செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.