வரும் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி நிச்சயம். இருப்பினும் தனித்துப் போட்டியிட்டாலும் குறைந்தது 40 தொகுதிகளிலாவது பாமக வெற்றி பெற வேண்டும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தைலாபுரத்தில் அக்கட்சியின் மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. ஆனால் இக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி கலந்துகொள்ளவில்லை. இதனையடுத்து பெரும்பாலான பாமக நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இந்த கூட்டத்தையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ் கூறியதாவது:-
50 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகளைப் பகிர்ந்து கொள்வதற்கான கூட்டம் இது. வரும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கூட்டணி நிச்சயம். இருப்பினும் தனித்து போட்டியிட்டாலும் குறைந்தது 40 தொகுதிகளிலாவது பாமக வெற்றி பெற வேண்டும்.
மாநாட்டுப் பணிகளால் களைப்போடு இருப்பதால் சிலர் கூட்டத்துக்கு வரவில்லை. சிலர் என்னை தொலைபேசியில் அழைத்து காரணம் சொன்னார்கள். கூட்டத்தை புறக்கணித்தவர்கள் மீது நடவடிக்கை தேவையில்லை. செயல்பட முடியவில்லை என்று யாரும் விருப்பம் தெரிவித்தால் விரும்பியப்படி மாற்றப்படுவார்கள்.
பாமகவில் கோஷ்டி மோதல் இல்லை. கூட்டத்தில் பங்கேற்க செயல் தலைவர் அன்புமணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அன்புமணி வரலாம், வந்து கொண்டிருக்கலாம். சிங்கத்தின் கால்கள் பழுதாகாதபோது சீற்றம் இன்னும் அதிகமாகத் தானே இருக்கும். ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்ற அந்த சீற்றம், எண்ணம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. பாமகவில் நானே ராஜா. இவ்வாறு அவர் கூறினார்.