நம்முடைய களத்தில் சினிமா ஸ்டார்களால் தாக்குப்பிடிக்க முடியாது: திருமாவளவன்!

நம்முடைய களத்தில் சினிமா ஸ்டார்களால் தாக்குப்பிடிக்க முடியாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் வரும் 31-ம் தேதி நடைபெற உள்ள மதச்சார்பின்மை காப்போம் எழுச்சி பேரணி தொடர்பாக மண்டல கலந்தாய்வுக் கூட்டம் விழுப்புரத்தில் நேற்று (மே 15-ம் தேதி) இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்புரையாற்றிய விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது:-

மதச்சார்பின்மைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனை பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கிறது. வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. இருப்பினும், பெரும்பான்மை இருந்ததால் சட்டமாக்கிவிட்டனர். இந்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, 5-வது கட்டமாக திருச்சியில் வரும் 31-ம் தேதி, மதச்சார்பின்மை காப்போம் என்ற தலைப்பில் பேரணி நடத்த உள்ளோம்.

பல அரசியல் கட்சிகள் எண்ணிக்கையை குறிப்பிட்டு மாநாடு நடத்தி வருகின்றனர். சிலர் முழு நிலவு மாநாடு என்கின்றனர். இதில் ஒரு அரசியல் ரீதியாக கருத்து இருக்காது. இதனால் என்ன பேசுகிறோம் என தெரியாமல் பேசுகின்றனர். வெல்லும் ஜனநாயகம், மண்ணுரிமை காப்போம், மதச்சார்பின்மை காப்போம் என்ற தலைப்பில் நாம் நடத்தும் அனைத்து மாநாடுகளிலும் ஆயிரம் பொருள் அடங்கி உள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம், முத்தலாக் தடை சட்டம், வக்பு திருத்தச் சட்டம், 370-வது சட்டப்பிரிவு ரத்து ஆகியவற்றுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறோம். முஸ்லிம்கள் வாக்குகளை பெற குரல் கொடுக்கவில்லை. ஒவ்வொரு தொகுதியிலும் முஸ்லிம் வாக்குகள் குறைவாக உள்ளது. மத அடிப்படையில் வாக்குகளைப் பெற கணக்கு போடவில்லை. சிறுபான்மையினரை அச்சுறுத்தாதே, பாதுகாப்பு கொடு என்பதற்காக குரல் கொடுக்கிறோம், போராடுகிறோம்.

தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. கூட்டணி பேச்சு நடத்துகின்றன. சராசரி அரசியல் கட்சிகளுக்கு தேர்தலை மையமாக கொண்டு இயங்க வேண்டும். இப்படிப்பட்ட சிந்தனைகளுடன் காய்களை நகர்த்தாமல், இதையும் தாண்டி சிந்திப்பதற்கு காரணம், நாம் அனைவரும் அம்பேத்கர், பெரியார் பிள்ளைகள். தேர்தல் களத்தை தாண்டி, கருத்தியல் களம் உள்ளது. அரசியலமைப்பு சட்டம் நீர்த்துப் போனால், அரசியல் செய்ய முடியாது. சாதி, மதத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் செய்ய முடியாது. அம்பேத்கர் வகுத்த அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும்.

இது நமக்கான களம். சினிமா ஸ்டார்கள் நமக்கு போட்டி ஆக முடியாது. நம்முடைய களம் வேறு. நம் களத்தில் அவர்களால் தாக்கு பிடிக்க முடியாது. அதிமுக ஆட்சியில் பரமக்குடியில் 7 பேர் கொலை செய்யப்பட்டதை எதிர்த்து திமுகவும், திமுக ஆட்சியில் நடைபெற்ற வேங்கைவயல் சம்பவத்தை எதிர்த்து அதிமுகவும் போராடவில்லை. அனைவரது உரிமைக்காகவும் நாம்தான் போராட முடியும். ஏனென்றால் நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற அம்பேத்கரிய அரசியலை நாம் எடுத்துள்ளோம்.

உலகுக்கு இந்தியா ஒரு மதச்சார்பற்ற அரசு என உணர்த்தி உள்ளது. இதற்கு காரணம் அம்பேக்தர். இந்தியாவில் மதச்சார்பின்மையை எதிர்த்து ஒரு தரப்பும், ஆதரித்து ஒரு தரப்பும் அரசியல் விவாதம் செய்கின்றனர். மதச்சார்பற்ற அரசை சனாதன சக்திகள், சங் பரிவார் ஏற்று கொள்ளவில்லை. அரசுக்கு ஒரு மதம் வேண்டும் என ஒரு தரப்பு வாதம் செய்கிறது. அம்பேத்கரின் சமூக கட்டமைப்பை தகர்க்க விரும்புகிறது. மதச்சார்பின்மையை பாதுகாக்க மாவோயிஸ்ட், விடுதலை புலிகளை போன்று ஆயுதம் ஏற்றி அம்பேக்தர் போராடவில்லை. நாடாளுமன்றம் மூலம் அரசியலமைப்பு சட்டத்தை நிறைவேற்றினார். புதிய இந்தியாவை உருவாக்கினார்.

பட்டியலின, பழங்குடியின மக்களுக்காகவும், நில உரிமைக்காகப் போராடும் உள்நாட்டு மக்களை, மாவோயிஸ்ட் என்ற பெயரில், ராணுவம் மூலம் அமித்ஷா அழித்து வருகிறார். ஒரே தேசம் ஒரே கலாச்சாரம் என்பது மதச்சார்பின்மைக்கு எதிரானது. அம்பேத்கரை மதிக்கிறோம் எனச் சொல்லிவிட்டு, அவர் வகுத்த அரசியலமைப்பு சட்டத்தை வலுவிழக்கச் செய்ய முயற்சிக்கின்றனர். அவர்களது எண்ணம் நிறைவேறாது. இவ்வாறு அவர் கூறினார்.