சென்னையில் டாஸ்மாக் அதிகாரிகள் வீடுகளில் அமலாக்க துறை சோதனை!

டாஸ்மாக் மது விற்பனை விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இதற்கிடையே இன்று சென்னையில் ஏழு இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகளின் சோதனை நடைபெறுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். மார்ச் 6ம் தேதி தொடங்கிய இந்த ரெய்டு சில நாட்கள் வரை நடைபெற்றது. அந்த சோதனை முடிந்த பிறகு, மதுபானங்கள் கொள்முதல் உட்பட பல்வேறு விஷயங்களில் 1000 கோடி ரூபாய்க்கு அளவுக்கு முறைகேடு நடந்ததாக அமலாக்கத் துறை அறிக்கை வெளியிட்டிருந்தது.

இது தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தங்கள் விசாரணையைத் தொடர்ந்து வருகிறார்கள். இதற்கிடையே இன்று அதிகாலை முதலை சென்னையில் சில டாஸ்மாக் அதிகாரிகளின் வீடுகளின் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள். குறிப்பாக தேனாம்பேட்டை, சேத்துப்பட்டு, திநகர், சூளைமேடு, மணப்பாக்கம் பகுதிகளில் சோதனை நடப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

டாஸ்மாக் மது விற்பனை விவகாரத்தில் ரூ. 1000 கோடி முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த விவகாரத்தில் ரெய்டு நடவடிக்கையைச் சட்டவிரோதம் என அறிவிக்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இருப்பினும், அந்த கோரிக்கையை ஏற்க மறுத்த அதிகாரிகள் விசாரணையைத் தொடர அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.