தேசப்பற்று இல்லைனா பாகிஸ்தானுக்கு போங்க: நயினார் நாகேந்திரன்!

“ட்விட்டரில் பாகிஸ்தான் ஆதரவு கருத்து தெரிவிப்போர் தமிழர் என சொல்ல அருகதை அற்றவர்கள்; தேசப்பற்று இல்லாதவர்கள் பாகிஸ்தான் செல்லுங்கள்” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் தமிழ்நாடு பாஜக சார்பில் நேற்று திருப்பூரில் தேசியக்கொடி பேரணி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு பாஜக பொறுப்பாளர் அரவிந்த் மேனன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்தப் பேரணியைத் தொடர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது:-

காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடந்தது விபத்து அல்ல. அது பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் திட்டமிட்ட சதி. இந்தியாவில் மதக் கலவரத்தை தூண்டவே பகல்காமில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. ஒரு தீவிரவாதியின் செயலால் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் நாம் பழி சொல்ல முடியாது. மாமன், மச்சான் போல் உள்ள இந்தியாவில் பகைமையை ஏற்படுத்தவே தாக்குதல் நடத்தப்பட்டது. பிரதமர் மோடி 12 நாட்கள் விரதம் இருப்பது போல் இருந்து, எப்படி பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலை எதிர்கொள்ள வேண்டும், ஆபரேஷனில் பாகிஸ்தானில் உள்ள ஒரு பொதுமக்கள் கூட பாதிக்கப்படக் கூடாது என்ற உணர்வோடு ஆபரேஷன் சிந்தூர் என்று பெயர் வைத்தார். இரண்டு பெண்களை அனுப்பி பாகிஸ்தானை நடுநடுங்க வைத்தவர் பிரதமர் மோடி. அன்புக்கு அன்பு. ரத்தத்திற்கு ரத்தம். பழிக்கு பழி எனக் காட்டி விட்டார் பிரதமர் மோடி.

அதற்காக தான் 100 கிமீ. தாண்டி பாகிஸ்தானின் லாகூரிலும், ராவல்பிண்டியிலும் விமான தளத்தை எல்லாம் நொறுக்கினார்கள். இதற்கு எந்த நாடும் சிறு கண்டனம் தெரிவிக்காததன் காரணம் மோடி. பிரதமர் மோடி நாடு நாடாக சுற்றியதன் விளைவே நமக்கு அனைத்து நாடுகளும் ஆதரவு அளித்தன. நம்முடைய நாட்டில் எல்லோர்க்கும் தேச பக்தி உள்ளது. தமிழகத்தில் ஒரு சிலர் சமூக வலைதளங்களில் ஆடு நனைகிறதே என ஓநாய் கவலைப்பட்ட கதையாக பேசுகின்றனர். இவர்களை தமிழன் என்று சொல்வதற்கே வெட்கமாக இருக்கிறது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாமே. பாகிஸ்தானை பற்றி தெரியுமா உங்களுக்கு? ஆந்திராவில் காங்கிரஸ் முதல்வர் பாகிஸ்தானை அழித்தே ஆக வேண்டும் என்கிறார். ஆனால் இங்குள்ள முதல்வர் என்ன சொல்றார்? எந்த விதமான பதிலும் இல்லை. ஒருநாள் ஊர்வலம் நடத்திவிட்டால் போதுமா? பாகிஸ்தானுக்கு ஆதரவாக தினமும் விவாதம் நடைபெறுகிறது. சமூக வலைதளங்களில் ஆதரவு கருத்துக்கள் பரப்பப்படுகிறது. தமிழக முதலவர் இதனை கண்டிக்க வேண்டும். கண்டிக்க தவறும் பட்சத்தில் அவரும் பாகிஸ்தானுக்கு ஆதரவு என்று தான் நாம் எடுத்துக் கொள்ள முடியும். வாஜ்பாய் சொன்னார் இந்தியாவில் ஒரு பகுதி போனால் பாகிஸ்தான் உலக வரைபடத்தில் இருக்காது என. அதனை மோடி செய்யப்போகிறார். இவ்வாறு அவர் பேசினார்.