இந்தியாவில் தற்போது 257 பேருக்கு கொரோனா சிகிச்சை: மத்திய அரசு!

நாடு முழுவதும் தற்போது 257 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. தற்போதைய சூழலை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பு உலகையே உலுக்கி எடுத்தது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஒட்டுமொத்த உலகமே ஸ்தம்பித்தது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உலக மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பிய நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், தாய்லாந்து போன்ற நாடுகளில் தற்போது கொரோனா தொற்று வேகமெடுக்கத் தொடங்கி உள்ளது. சிங்கப்பூரில் மட்டும் மே மாத தொடக்கத்தில் 14,000 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதனால் உலக நாடுகள் மத்தியில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்தியாவிலும் கொரோனா பரவல் அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது எனவும் தற்போது 257 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உள்ளதாகவும், சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மத்திய அரசின் சுகாதாரத்துறை கூறி உள்ளது.

இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, தமிழ்நாடு இந்த முறை மூன்றாவது இடத்தில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, நாட்டில் பதிவான புதிய கொரோனா தொற்று பாதிப்புகளில் கேரளா (69) மற்றும் மகாராஷ்டிராவிற்கு (44) அடுத்து தமிழ்நாடு (34) பாதிப்புகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 18 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதன் மூலம், இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான புதிய நோயாளிகளைக் கொண்ட மாநிலங்களில் மூன்றாம் இடத்திற்கு தமிழ்நாடு வந்துள்ளது. தற்போது தமிழகத்தில் 34 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மத்திய அரசு தரப்பில் கூறுகையில், “கொரோனா பரவல் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு 257 பேருக்கு தான் உள்ளது. எனவே இந்தியாவில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கொரோனா பாதிப்பு தலைதூக்கி வருகிறது” என மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை அதிகாரிகள் இது குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று கூறியுள்ளனர். வைரஸின் வீரியம் குறைந்துள்ளதாகவும், பெரும்பாலான தொற்றுகள் லேசான அறிகுறிகளையே கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். எனினும், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், தமிழக சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் வேரியண்ட் 2020, 2021ஆம் ஆண்டுகளில் இருந்ததுபோல் தீவிரத்தன்மையைக் காட்டவில்லை. குறிப்பாக தடுப்பூசி போட்டவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு சாதாரண காய்ச்சல் மற்றும் தொண்டை வலி போன்ற சிறிய அளவிலான பாதிப்புகள் மட்டுமே ஏற்பட்டு வருகின்றன.

எனினும், முந்தைய கொரோனா பரால் அலைகளின் போது ஏற்பட்ட கடுமையான பாதிப்புகள் மீண்டும் நிகழாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். முகக்கவசம், சானிடைஸர் போன்ற அடிப்படை சுகாதார பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றுவது அவசியம் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.