அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கான நீதிமன்ற ஆணையை செயல்படுத்தாத திமுக அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
கடந்த இருபது ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு உயர் கல்வியை போதித்து வருபவர்கள் கவுரவ விரிவுரையாளர்கள். உயர் கல்வியின் உயிர் நாடியாக விளங்கிக் கொண்டிருக்கும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு உரிய ஊதியம் அளிக்காத அவல நிலை நிலவுகிறது.
பல்கலைக் கழக மானியக் குழுவின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் 57,500 ரூபாய் ஊதியம் 12 மாதங்களுக்கு வழங்கப்பட வேண்டும். இதனை திமுக அரசு செயல்படுத்தாத நிலையில், இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, இதனைச் செயல்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், இதுநாள் வரை நீதிமன்ற உத்தரவு செயல்படுத்தப்படவில்லை.
இந்தச் சூழ்நிலையில், கல்லூரிக் கல்வி ஆணையர் மேற்படி வழக்கினை தொடுத்தவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், பல்கலைக் கழக மானியக் குழுவின் பரிந்துரையின்படி கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்படவில்லை என்று தெரிவித்து, 12 மாதங்களுக்கு சம்பளம் வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளார். இது, பல்கலைக் கழக மானியக் குழுவின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கும், நீதிமன்ற உத்தரவிற்கும் எதிரானது.
கவுரவ விரிவுரையாளர்கள் எந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டார்கள் என்று தெரிந்து தான் அவர்களுக்கான ஊதியம் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டது என்பதையும், இதன் அடிப்படையில் தான் சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டது என்பதையும் இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
எனவே, பல்கலைக் கழக மானியக் குழுவின் பரிந்துரையின்படி கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டி மே மாத சம்பளத்தை வழங்க இயலாது என்று கல்லூரிக் கல்வி இயக்குநர் தெரிவிப்பது பொருத்தமற்றது. கொடுப்பதும் குறைந்த சம்பளம், அதுவும் ஒரு மாதத்திற்கு கிடையாது என்று தெரிவிப்பது இயற்கை நியதிக்கு முரணான செயல் ஆகும்.
முதல்வர், இதில் உடனடியாகத் தலையிட்டு, கவுரவ விரிவுரையாளர்களுக்கான மே மாத சம்பளத்தை வழங்கவும், பல்கலைக் கழக மானியக் குழுவின் பரிந்துரைப்படி ஊதியத்தை அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.