மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும்: டி.டி.வி. தினகரன்!

மின் உற்பத்தியை பெருக்குவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழகத்தில் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் வீட்டு மின் நுகர்வோர், வணிக ரீதியாக மின்சாரத்தை பயன்படுத்துவோர் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கான மின்சாரக் கட்டணத்தை உயர்த்த மின்வாரியத்திற்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்திருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

தி.மு.க. அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற பின் கடந்த 2022-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் உயர்த்தப்படும் மின்கட்டண உயர்வால் ஏழை, எளிய சாமானிய மக்கள், வணிகர்கள் மற்றும் தொழில்துறையினர் கடுமையாக பாதிப்படைந்து வரும் நிலையில், தற்போது மேலும் 3.16 சதவீதம் அளவிற்கு மின்கட்டணத்தை உயர்த்த முடிவு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

கடந்த மூன்று ஆண்டுகளாக உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வின் மூலமாக மட்டும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருக்கும் நிலையில், மேலும் மின்கட்டணத்தை உயர்த்தினால் மட்டுமே கடன் அளவை குறைக்க முடியும் என கூறுவது தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

ஏற்கனவே, ஆண்டுக்கு ஆண்டு உயர்த்தப்படும் மின்கட்டண உயர்வின் மூலம் கிடைக்கும் வருவாய் எங்கே செல்கிறது என்ற கேள்வி எழுந்திருப்பதோடு, தற்போது தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதாக வெளியாகியிருக்கும் செய்திகளும் மின்வாரியத்தின் செயல்பாடுகளை சந்தேகத்திற்கு உள்ளாக்குகின்றன.

எனவே, தமிழகத்தில் ஜூலை மாதம் முதல் பல்வேறு பயன்பாடுகளுக்கான மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் மின்வாரியத்தின் முடிவை உடனடியாக கைவிடுவதோடு, மின் உற்பத்தியை பெருக்குவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.