மதுரையில் அனுமதியின்றி நடக்கும் குவாரி பணிகள்: சு.வெங்கடேசன் கண்டனம்!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கொண்டையம்பட்டியுள்ள அனுமதி இல்லாமல் பாறைகளை வெட்டி எடுக்கும் பணிகள் நடந்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார். சட்டவிரோதமாக குவாரிப் பணிகள் நடந்து வருவதாக கூறியுள்ள அவர், இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மதுரையில் 2021ஆம் ஆண்டு வரை சுமார் 60 கிரானைட் குவாரிகள் இயங்கி வந்தன. அதில் ஏராளமான குவாரிகளில் இருந்து கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு பெரிய அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இதுதொடர்பான புகார்கள் எழுந்த நிலையில், மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம் விசாரணை நடத்தி, தமிழக அரசுக்கு ரூ.16 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்திய போது, பிஆர்பி நிறுவன அதிபர் பழனிசாமி கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து மதுரையில் கிரானைட் குவாரிகள் மூடப்பட்டதோடு, கனிம வள சுரங்கங்கள் அமைக்கவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. அண்மையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக விவசாயிகள் தீவிரமான போராட்டத்தை முன்னெடுத்து வெற்றி பெற்றனர்.

இந்த நிலையில் மதுரை – வாடிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கொண்டையம்பட்டி கிராமத்தில் சுற்றுச்சூழல் மற்றும் சிறு கனிம சுரங்க விதிகளுக்கு எதிராக அனுமதி இல்லாமல் பாறைகளை வெட்டியெடுக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த புகாரை அளித்திருப்பது மதுரை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தான். இதுதொடர்பாக தனது எக்ஸ் பதிவில் அவர் கூறியுள்ளதாவது:-

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட கொண்டையம்பட்டி கிராமத்தில் சுற்றுச்சூழல் மற்றும் சிறு கனிம சுரங்க விதிகளுக்குப் புறம்பாகவும், அனுமதியே இல்லாமலும் பாறைகளை வெட்டியெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாகவும் இங்கு குவாரிப் பணிகள் நடப்பதால் சுற்றுச்சூழலுக்கும், கானுயிர்களுக்கும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இப்பணிகளால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பதோடு, அப்பகுதி மக்களுக்கு சுகாதார சீரழிவும் ஏற்படும். ஊடகங்கள் இது குறித்து செய்திகள் வெளியிட்ட பின்பும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை. இங்கு நடைபெற்றுள்ள சட்டவிரோதக் குவாரி நடவடிக்கைகள் மீது தமிழக அரசு முழுமையாக ஆய்வு செய்து சட்டப்படியான நடவடிக்கையை உறுதி செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.