உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்துக்கள் மனித மாண்புகளுக்கு முற்றிலும் பொருத்தம் இல்லாதவை: வைகோ!

“அகதிகளுக்கு எதிரான உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்துக்கள் மனித மாண்புகளுக்கு முற்றிலும் பொருத்தம் இல்லாதவை. இப்படிப்பட்ட கருத்துக்களை பயன்படுத்துவதை தவிர்க்க தலைமை நீதிபதி அறிவுறுத்த வேண்டும்.” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

இலங்கை தமிழரான சுபாஷ்கரன் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2015-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டு, ராமநாதபுரம் நீதிமன்றம் அவருக்கு பத்தாண்டுகள் சிறை தண்டனை விதித்தது. சென்னை உயர் நீதிமன்றம் இவர் தண்டனையை ஏழாண்டு காலமாக 2022-ம் ஆண்டில் குறைத்தது. இவரது தண்டனை காலம் இந்த ஆண்டுடன் முடிவதை முன்னிட்டு, தண்டனைக் காலம் முடிந்தவுடன் இந்தியாவிலேயே தங்க அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில், அவர் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில், அவர் முறையிட்ட போது, அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகளான திபங்கர் தத்தா மற்றும் வினோத் சந்திரன் அமர்வு, “உலகம் முழுவதிலும் உள்ள அகதிகளை வரவேற்க இந்தியா தர்ம சத்திரம் அல்ல, இந்தியாவில் தொடர்ந்து தங்கும் உரிமை உங்களுக்கு இல்லை, இலங்கையில் உயிருக்கு ஆபத்து என்றால் வேறு நாட்டுக்குச் சென்று புகலிடம் கோருங்கள்” என்று தெரிவித்துள்ள கருத்து கவலைக்கு உரியதாகும்.

தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான இலங்கை தமிழர்கள் அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் சிலரை இந்திய அரசு, இந்தியாவிலிருந்து வெளியேற வேண்டும் என உத்தரவிட்டபோது, இது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம், “இலங்கை தமிழ் அகதிகளை அவர்களின் ஒப்புதல் இல்லாமல் திருப்பி அனுப்பும் அதிகாரம் அரசுக்கு உண்டு என்பது ஏற்கத்தக்கது அல்ல. திரும்பிச் செல்ல விரும்பாத அகதிகளை கட்டாயப் படுத்தி வெளியேற்றக் கூடாது” என ஆணை பிறப்பித்தது. இதன் விளைவாக இலங்கை தமிழர்கள் இங்கு வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்துக்கள் அரசமைப்புச் சட்டம் வலியுறுத்துகிற மனித மாண்புகளுக்கு முற்றிலும் பொருத்தம் இல்லாத வார்த்தைகள். நீதிபதிகள் இப்படிப்பட்ட கருத்துக்களை பயன்படுத்துவதை தவிர்க்க அறிவுறுத்துமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.