நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் மேற்கொள்ள இருக்கிறார். கடந்தாண்டு ஆண்டு அந்தக் கூட்டத்திற்கு செல்லாத ஸ்டாலின் இந்த ஆண்டு செல்வது ஏன்? அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்து செல்கிறாரா? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி இருந்தார். இந்த நிலையில் நான் பயணம் செய்தால் பழனிசாமிக்கு ஏன் வலிக்கிறது என பதிலடி கொடுத்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்.
பாஜக தலைமையிலான மத்திய அரசை தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவரான ஸ்டாலின் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். கடந்த ஆண்டு பட்ஜெட் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறினார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின். மேலும் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்தாண்டு நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில் இந்த ஆண்டு நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது. இதனை விமர்சித்து பேசி இருந்தார் அதிமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி. டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில் திமுகவுக்கு சிக்கல் ஏற்பட்டிருப்பதாகவும், அதன் காரணமாகவே ஸ்டாலின் டெல்லி பயணம் மேற்கொள்கிறார் என குற்றம் சாட்டி இருந்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த எக்ஸ் பதிவில்,” “மத்திய அரசு தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதால் நிதி ஆயோக் கூட்டத்தை நான் புறக்கணிக்கிறேன்” என்று வீராவேசமாக பேசிய பொம்மை வேந்தர் ஸ்டாலின் , தற்போது நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லிக்கு பறக்கிறாராம்! தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாதவர், தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் செல்கிறார்! அன்று 2 G-க்காக அப்பா டெல்லி சென்றார். இன்று.. டாஸ்மாக்.. தியாகி..தம்பி.. வெள்ளைக் குடைக்கு வேலை வந்துவிட்டதோ? படுத்தே விட்டாரய்யா.. எல்லாம் “தம்பி” படுத்தும் பாடு!” எனக் கூறியிருந்தார்
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இது தொடர்பாக எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமையை #NITIAayog கூட்டத்தில் வெளிப்படுத்த 24-ஆம் தேதி டெல்லி செல்கிறேன்! சசிகலா முதல் அமித் ஷா வரை ஆள் மாறினாலும், டேபிளுக்கு அடியில் காலைப் பிடிக்கும் பழக்கம் மாறாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு இதனைக் கண்டு ஏன் வலிக்கிறது?
“பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது” என்று அடித்துச் சொன்ன நாக்கின் ஈரம் காய்வதற்குள், ஒரே ரெய்டில் ‘புலிகேசி’யாக மாறி ‘வெள்ளைக்கொடி ஏந்தச் சென்ற’ பழனிசாமி என்னைப் பார்த்து வெள்ளைக் கொடி ஏந்தியதாகப் பேச நா கூசவில்லையா? இந்த ஸ்டாலினின் கை கருப்பு சிவப்புக் கழகக் கொடியை ஏந்தும் கை! பேரறிஞரால் தூக்கிவிடப்பட்ட கை! கலைஞரின் கரம் பற்றி நடந்த கை! எந்நாளும் உரிமைக்கொடியைத்தான் ஏந்துவேன்! ஊர்ந்து போகமாட்டேன்! இன்றைக்குக் கூட, தமிழ்நாட்டின் உரிமைக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன். கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பேன்! தமிழ்நாட்டிற்கான நிதியைப் போராடிப் பெறுவேன்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.