எட்டப்பன் ரகுபதி எடப்பாடியாரை குறைசொல்வதா?: ஆர்.பி.உதயகுமார் கண்டனம்!

எட்டப்பன் ரகுபதி எடப்பாடியாரை குறைசொல்வதா? உங்கள் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. ரகுபதியின் கணக்குகள் எங்களிடம் உள்ளது என்று ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

உண்ட வீட்டுக்கு, இரண்டகம் செய்வது போல், வாழ்வளித்த இயக்கத்தையும், அரசியல் அங்கீகாரம் தந்த புரட்சித் தலைவியையும் காட்டிக் கொடுத்து, தீய சக்தி திமுக-வில் தஞ்சமடைந்து தனது வாழ்வை மேலும் வளப்படுத்திக்கொண்டு எஜமான விசுவாசத்தைக் காட்ட முயற்சிக்கிறார்.

1991-ல் இவரது சொத்தின் மதிப்பு என்ன? இன்று இவரது சொத்தின் மதிப்பு என்ன? என்பதை இவரது தொகுதி மக்கள் நன்கு அறிவார்கள். ‘காரியம் ஆக வேண்டும் என்றால் காட்டிக் கொடுக்கவும் தயங்கமாட்டார்கள்’ என்று ஒரு பெரிய மனிதர் சொன்னதை நிரூபிக்கும் வகையில், கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழக மக்களின் நலனுக்கு ‘நிதி ஆயோக்’ கூட்டத்தில் கலந்துகொள்ளச் செல்லாமல், இன்று தன் மகனையும், அவரது கூட்டாளி பினாமிகளையும் காப்பாற்ற, டெல்லிக்கு காவடி தூக்க ‘நிதி ஆயோக்’ பெயரை பயன்படுத்தும் சந்தர்ப்பவாதி திரு. ஸ்டாலின், தனது கொத்தடிமை ரகுபதி பெயரால் பித்துகுளித்தனமாக உளறல் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் பல்லாயிரம் கோடிகளை கோல்மால்புர கொள்ளைக் கும்பல் வாரிச் சுருட்டியது அம்பலமானதும், டெல்லி பாணியில் நடைபெறப் போகும் கைது படலங்களுக்கு பயந்து நடுங்குவது, எட்டப்பன் ரகுபதியின் வார்த்தைகளில் இருந்து தெரிகிறது. தமிழ் நாட்டில் சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுவரை மத்திய அரசின் தன்னிச்சை அதிகாரம் பெற்ற புலனாய்வுத் துறைகளின் (சி.பி.ஐ / ஈ.டி) விசாரணையை எதிர்த்து உயர்நீதிமன்றத்திலோ, உச்சநீதிமன்றத்திலோ தமிழக அரசே வழக்குத் தொடுக்காத நிலையில், விடியா திமுக அரசு கனிம வளக் கொள்ளை வழக்கில் அரசு அதிகாரிகளை நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு கேட்டும், மற்றும் சாட்சிகளை விசாரிக்கக்கூடாது என்றும், டாஸ்மாக் ஊழல் வழக்கில் அமலாக்கத் துறையின் விசாரணையை எதிர்த்தும் நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்ததில் இருந்தே ‘மடியில் கனம், வழியில் பயம்’ என்பது தமிழக மக்களுக்கு தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது.

* ஊழலுக்காகவும், நாட்டு ரகசியங்களை வெளிநாட்டுக்கு தெரிவித்ததற்காகவும் இரண்டு முறை ஆட்சியை இழந்த நாசகார கும்பல்.

* தங்களின் சுயநலத்துக்காக கர்நாடகாவில் கபினி, ஹேரங்கி, கிருஷ்ணராஜசாகரில் அணைகளைக் கட்ட அனுமதித்து, தமிழக மக்களை தண்ணீருக்கு கையேந்த வைத்த கும்பல்.

* காவிரி நதிநீர் ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் தமிழகத்தின் காவிரி உரிமையை தாரை வார்த்துக் கொடுத்த கும்பல்.

* தங்களது குடும்பத் தொழிலை பாதுகாக்க, மேகதாதுவின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை இதுவரை எதிர்க்கத் துணிவில்லாத கும்பல்.

* கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்க்க ஒத்துழைத்த துரோகக் கும்பல்.

* அலங்கோல ஆட்சியில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி, நீதி கேட்டு காவல் துறையில் புகார் அளிக்கும் பெண்களின் விபரங்களை திட்டமிட்டு வெளியிட்டு, பாதிக்கப்பட்ட பெண்கள் இனி தைரியமாக புகார் அளிக்க முன்வருவதைத் தடுத்து, பல ‘சார்’-களைக் காப்பற்றும் கும்பல்.

* மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் இந்திராகாந்தியை, பூலான்தேவி, சேலை கட்டிய ஹிட்லர் என்று வசைபாடிவிட்டு, பின்பு அவரது காலில் விழுந்து, சர்க்காரியா கமிஷன் வழக்குகளில் இருந்து தப்பித்த கேடுகெட்ட கும்பல்.

* மத்திய காங்கிரஸ் அரசு, அறிவாலய மாடியில் உள்ள டி.வி. அலுவலகத்தில் சி.பி.ஐ.யை விட்டு ரெய்டு நடத்திய போது, கீழ் தளத்தில் வாய்பொத்தி, மெய்பொத்தி 63 சட்டமன்றத் தொகுதிகளை காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்து கூட்டணி அமைத்த தொடை நடுங்கி கும்பல்.

* முத்துவேல் கருணாநிதி கனிமொழியும், ஆ. ராசாவும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் மத்திய காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி அரசாலேயே கைது செய்யப்பட்ட போது, ‘கூடா நட்பு கேடாய் முடிந்தது’ என்று புலம்பிய கும்பல்.

* டெல்லி காங்கிரஸ் எஜமானர்களுடன் யாருக்கும் புரியாத வகையில் சமரசமாகி இன்றுவரை சாஷ்ட்டாங்கமாக காலில் விழுந்து கிடக்கும் கும்பல்.

எங்கள் தன்மானச் சிங்கம் எடப்பாடியாரின் நேரடியான கேள்விகளை, எதிர்கொள்ள முடியாமல் கொத்தடிமை ரகுபதி, அறிக்கை என்ற பெயரில் பிதற்றியுள்ளதைப் பார்த்து தமிழக மக்கள் எள்ளி நகையாடுகிறார்கள். ‘ஆதாயம் இல்லாமல் ஒருவர் ஆற்றை கட்டி இறைக்க மாட்டார்’ – என்ற ஒரு பழமொழி உண்டு. கொத்தடிமை ரகுபதி எந்தெந்த ஆதாயங்களுக்காக, கோல்மால்புர குடும்பச் சேற்றை கட்டி இறைக்கிறார் என்பது தமிழக மக்களுக்குத் தெரியும்.

உங்கள் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. நயவஞ்சகத்தின் மொத்த உருவமான, நக்கிப் பிழைப்பதையே பிறவி லட்சியமாகக் கொண்டு, காட்டிக் கொடுப்பதில் பிஹெச்டி, பட்டம் பெற்ற, எஸ். ரகுபதியின் கணக்குகள் எங்களிடம் உள்ளது. நீ கக்கிய ஒவ்வொரு வார்த்தைக்கும் பதில் சொல்ல வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை! உன் கையில் அதிகாரம் இருக்கிறது என்ற துணிச்சலில் வாய் நீளம் காட்டி இருக்கிறாய். காலச் சக்கரம் சுழல்கிறது! இந்த நாசகார கொள்ளைக் கும்பலை தமிழக மக்கள் வீட்டிற்கு அனுப்பும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.