தமிழகத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு சுகாதாரத் திட்டங்களால் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற மனநல சர்வதேச மாநாட்டில் பங்கேற்ற தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘நாள்தோறும் மேற்கொள்ளப்படும் நடைபயிற்சியால், உடல் மற்றும் மனநலத்தில் ஏற்படும் தாக்கம்’ குறித்த தலைப்பில் பேசியதாவது:-
கடந்த 2004-ம் ஆண்டு நடந்த ஒரு மிகப்பெரிய சாலை விபத்தில் கால் மூட்டு 4, 5 துண்டுகளாக உடைந்து தீவிர சிகிச்சை பெற்று நிலைகுலைந்த சூழலில் தன்னம்பிக்கையை கைவிடாது படிப்படியாக யோகா பயிற்சி, மெதுவாக நடத்தல், சிறிய தூரங்கள் ஓடுதல் என முயற்சிக்க தொடங்கி, ஓட்டப்பயிற்சி அளவுக்கு உயர்ந்து, மாரத்தான் பந்தயத்தில் பங்கேற்கும் வகையில் வளர்ச்சி கண்டேன்.
தொடர்ந்து உலக சாதனையாளர்கள் பட்டியலில் இடம்பெற்றதோடு, இதுவரை 160 மாரத்தான் போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். வரும் 24-ம் தேதி அமெரிக்கா – காலிபோர்னியா மாகாணத்திலுள்ள சன்னிடேலில் நடக்கும் மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ள உள்ளேன்.
தமிழக அரசால் 2020 மற்றும் 2021-ம் ஆண்டு நடத்தப்பட்ட ‘கலைஞர் நினைவு பன்னாட்டு மெய்நிகர் மாரத்தான்கள்’, 2022-ம் வருடம் நடைபெற்ற ‘கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான்’ மற்றும் 2023-ம் ஆண்டு நடைபெற்ற கின்னஸ் உலக சாதனை படைத்த ‘கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான்’ ஆகியவற்றில் முன்னிலை வகுத்து பங்கேற்றேன்.
இந்நிகழ்வுகள் மூலம் கிடைக்கப்பெற்ற பதிவுத்தொகையான ரூ.5.43 கோடியை கொரோனா நோய்த்தடுப்பு நிவாரண நிதி, எழும்பூர் அரசு குழந்தைகள் மற்றும் தாய்சேய் நல மருத்துவமனையில் குழந்தைகளின் பெற்றோர் தங்குவதற்கான 4 மாடி கொண்ட உறைவிட கட்டிடம் மற்றும் ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான உயர் சிகிச்சைக்கான கட்டிடம் போன்ற பல்வேறு உயர் நோக்கங்களுக்காக நன்கொடையாக அளிக்கப்பட்டது.
தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவதில் எவ்வாறு தமிழகம் முன்னோடி மாநிலமாக இந்திய அளவில் திகழ்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக, தமிழக முதல்வரால் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கப்பட்ட ‘மக்களைத் தேடி மருத்தும் திட்டம்’, ஐக்கிய நாடுகள் அமைப்பின் 2004-ம் ஆண்டுக்கான விருதை பெற்றுள்ளது. ‘பாதம் பாதுகாப்போம் திட்டம்’, ‘இதயம் காப்போம் திட்டம்’, ‘இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும்-48’ போன்ற பிற பல்வேறு திட்டங்கள் மூலம் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
இளைய சமுதாயத்தினருக்கும், வருங்காலத் தலைமுறையினருக்கும் தினசரி நடைபயிற்சி மற்றும் ஓட்டப்பயிற்சி மூலம் உடல் மற்றும் மனநலம் காக்கப்படுவதை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நல்வாய்ப்பாக இப்பயணம் அமைந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.