திமுக கூட்டணியை விட்டு திருமாவளவன் வர வேண்டும்: நயினார் நாகேந்திரன்!

திமுக கூட்டணியில் இருந்து விசிக தலைவர் திருமாவளவன் வெளியில் வர வேண்டும் என்பதே விருப்பம் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் திமுக கூட்டணியில் உள்ள விசிக, மதிமுக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் இணக்கமாக உள்ளன. அதேபோல் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகி இருக்கிறது. இதனால் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் முடிவு என்னவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகளின் நிலைப்பாடு குறித்தும் மக்களிடையே விவாதம் எழுந்துள்ளது.

கடந்த சில வாரங்களாகவே பாஜக தலைவர்கள் தரப்பில் திமுகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக தவெகவை மறைமுகமாக கூட்டணிக்கு அழைத்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவன் விலகி வெளியில் வர வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே பாஜக தரப்பில் திருமாவளவனுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. அதன்பின் பாஜக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இணைந்து கொண்டது. தற்போது மீண்டும் திருமாவளவனை பாஜக அணுகுவதாக தெரிகிறது. இதுதொடர்பாக நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், பாமகவில் நடப்பது உட்கட்சி பிரச்சனை. ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ஒன்றாக இருந்து திமுகவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். பாஜக யாரையும் பின்னணியில் இருந்து இயக்கவில்லை. பாமக ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியில் இருந்தார். தொடர்ந்து பாமக கூட்டணியில் வர வேண்டும் என்பதே விருப்பம். அதேபோல் அதிமுக – பாஜக கூட்டணி உடைந்து போக வேண்டும் என்று திருமாவளவன் விருப்பப்படுகிறார். ஆனால் எனக்கு திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளிவர வேண்டும் என்பதே விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.