அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கோவை காவல் ஆணையரிடம் அதிமுகவினர் புகாரளித்துள்ளனர்.
கோவை குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணாபுரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் எஸ்.பி.வேலுமணி. தொண்டாமுத்தூர் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவாக உள்ள இவர் அதிமுக தலைமை நிலைய செயலாளராகவும் உள்ளார். முன்னாள் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
இந்நிலையில் அதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் மற்றும் மாநில துணைச் செயலாளர் தாமோதரன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு இன்று (மே 23) காலையில் வந்தனர். காவல் ஆணையரை சந்தித்து ஒரு மனு அளித்தனர்.
அந்த மனுவில், “அதிமுக தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கோவை தொண்டாமுத்தூர் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணியின் சுகுணாபுரம் இல்ல முகவரிக்கு காளப்பட்டி அஞ்சல் நிலையத்திலிருந்து முகவரி எழுதப்படாத ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில், ‘வரும் ஜூலை மாதம் 30-ம் தேதிக்குள் கோவையில் வெடிகுண்டு வெடிக்க உள்ளது. அதில் நாங்கள் உங்களை கொல்ல திட்டமிட்டுள்ளோம்.
எங்களுடைய நபர்கள் உங்கள் அருகில் இருக்கிறார்கள். எங்கள் அமைப்புக்கு பணம் வேண்டும். காவல்துறையில் கூட எங்கள் ஆட்கள் இருக்கிறார்கள். ஒரு கோடி பணத்தை பையில் வைத்து நாங்கள் சொல்லும் இடத்துக்கு வந்து வைக்கவும். நீங்கள் வரலாம் அல்லது உங்களது ஓட்டுநர் வரலாம். வரும் 25-ம் தேதி மதியம் 2 முதல் 2.30 மணிக்குள் காளப்பட்டி – வெள்ளாளப்பட்டி சாலையில் கலியபெருமாள் குட்டை அருகே ஒரு குப்பைமேடு உள்ளது. அங்கு வந்து வைத்துவிட்டு சென்று விடவும். இது தொடர்பாக போலீஸாரிடம் புகார் அளித்தாலோ, எங்களை பிடிக்க முயற்சித்தாலோ உங்கள் குடும்பத்தில மூன்று பேரை மூன்று மாதங்களுக்குள் கொல்வோம்.’ என்று கூறப்பட்டிருந்தது.
எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல் விடுத்து, அவரிடம் பணத்தை பறிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், அவரது குடும்பத்தில் உள்ளவர்களை கொல்வோம் என மிரட்டல் விடுத்துள்ளனர். எனவே எஸ்பி வேலுமணி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும். கோவையில் வெடிகுண்டு வெடிக்க சதி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் மிரட்டல் விடுத்தவர்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று கூறப்பட்டுள்ளது.