“மாதம் ஆயிரம் ரூபாய் உதவி மூலம் பெண்களை மூளைச் சலவை செய்து வாக்குகளைப் பெற வேண்டும் என திமுக நினைக்கிறது,” என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று (மே 23) செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:-
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஏறக்குறைய 8, 9 மாதங்கள் உள்ளன. கடலூரில் அடுத்தாண்டு ஜனவரி 9-ம் தேதி தேமுதிக மாநாடு நடைபெறவுள்ளது. அதற்குள் தேர்தல் தொடர்பாக முடிவு செய்யப்பட்டு, அந்த மாநாடே மிகப் பெரிய அறிவிப்பு மாநாடாக இருக்கும்.
அமலாக்கத் துறை சோதனை ஒன்றும் புதிது இல்லை. அது வழக்கமான ஒன்றுதான். ஆனால், தவறு செய்தால் தண்டனையை அனுபவித்துதான் ஆக வேண்டும். அதில் மாற்றுக் கருத்து கிடையாது. மக்கள் வரிப்பணத்தில் லஞ்சம் பெற்றிருந்தாலோ, ஊழல் செய்திருந்தாலோ கட்டாயம் தண்டனை அனுபவித்துதான் ஆக வேண்டும். அமலாக்கத் துறையினர் சோதனை நடத்துகிறார்கள். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தெரிவதில்லை. எனவே, உண்மை நிலை என்ன என்பது மக்களுக்கும் தெரிய வேண்டும். லஞ்சம், ஊழல் இல்லாத நல்லாட்சி அமைய வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம்.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள விவகாரம் தொடர்பாக நாம் இப்போது எந்த கருத்தும் கூற முடியாது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
திமுக அரசு தேர்தல் நேரத்தில் அளித்த பல வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றாமல் தான் உள்ளது. ஆயிரம் ரூபாய் உதவி மூலம் பெண்களை மூளைச் சலவை செய்து வாக்குகளை பெற வேண்டும் என நினைக்கிறார்கள். தமிழ்நாட்டில் மதுபோதை பிரச்சினை தான் பெரிதாக இருக்கிறது. டாஸ்மாக், கள்ளச் சாராயம் மற்றும் போதை வஸ்துகளால் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி பாதிக்கப்படுகின்றனர். இதனால் கொலை, கொள்ளை சம்பவங்கள் தமிழ்நாட்டில் அதிகளவில் நடக்கின்றன. நீட் தேர்வை ஒழிப்போம், டாஸ்மாக் கடைகளை மூடுவோம், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவோம் என்பன போன்ற பல்வேறு விசயங்களை அவர்கள் இன்னும் செயல்படுத்த வேண்டியுள்ளது. இன்னும் 8, 9 மாதங்கள் இருக்கின்றன. இந்த அரசு என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மக்கள் தான் இறுதி எஜமானர்கள். அவர்கள் 2026 தேர்தலில் நல்ல தீர்ப்பை கொடுப்பார்கள் என உறுதியாக கூறுகிறேன். கூட்டணி என அமைத்த பிறகு, அதற்குள் மீண்டும் சலசலப்புகள் வந்தால் அந்த கூட்டணி பிரிவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. அதனால் தான் அதிமுக குறித்து யாரும் தனிப்பட்ட கருத்துக்களை கூற வேண்டாம். பொறுமையாக இருந்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் நயினார் நாகேந்திரன் தனது கட்சியினருக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். தேமுதிக கூட்டணி நிலை குறித்து ஜனவரி 9-ம் தேதி கடலூர் மாநாட்டில் அறிவிக்கப்படும். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சரியான தீர்ப்பை வழங்கியது போல தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திலும் சரியான தீர்ப்பை காலதாமதம் இல்லாமல் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.