ரஷ்யாவில் ட்ரோன் தாக்குதல்: கனிமொழி சென்ற விமானம் தாமதம்!

ரஷ்யாவின் மாஸ்கோவை குறிவைத்து உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலால், கனிமொழி தலைமையிலான எம்பிக்கள் சென்ற விமானம் தாமதமாக தரையிறங்கியுள்ளது.

ரஷ்யா – உக்ரைன் இடையே மூன்று ஆண்டுகளுக்கு மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில், கடந்த சில நாள்களாக தீவிரமான ட்ரோன் தாக்குதல்களை இரு நாடும் நடத்தி வருகின்றது. ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ உள்பட பல்வேறு மாகாணங்களைக் குறிவைத்து தொடர்ந்து இரண்டாவது நாளாக வியாழக்கிழமை இரவும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.

ரஷ்யாவின் 10 மாகாணங்களை குறிவைத்து உக்ரைன் அனுப்பிய 105 ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து மாஸ்கோ உள்பட ரஷ்யாவின் பல்வேறு மாகாணங்களில் விமான சேவை நேற்றிரவு 3 மணிநேரத்துக்கு மேலாக பாதிக்கப்பட்டது.

ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தை எடுத்துரைப்பதற்காக ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவுக்கு நேற்று பயணம் செய்த கனிமொழி தலைமையிலான இந்திய எம்பிக்கள் சென்ற விமானமும் தரையிறங்குவதில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது. சில மணிநேரங்களில் இந்திய எம்பிக்கள் சென்ற விமானம் பாதுகாப்பாக தரையிறங்கிய நிலையில், அவர்களை இந்திய தூதரக அதிகாரிகள் வரவேற்று பத்திரமாக ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றனர்.

இந்திய எம்பிக்கள் குழுவினர் இன்று ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சரை நேரில் சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.