தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில், ‘தேசம் காக்கும் ராணுவ வீரர்களுக்கு சல்யூட்’ மாநாடு, வரும் மே 25-ம் தேதி திருச்சி ராணுவ மைதானத்தில் நடத்த இருப்பதாக கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செல்வப்பெருந்தகை சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சிந்தூர் ஆப்ரேஷன் போரில் வெற்றி கண்ட ராணுவ வீரர்களை கவுரவிக்கும் விதமாக ‘தேசம் காக்கும் ராணுவ வீரர்களுக்கு சல்யூட்’ என்ற தலைப்பில், வரும் மே 25-ம் தேதி திருச்சி ராணுவ மைதானத்தில் மிகப்பெரிய மாநாடு நடத்தி அவர்களுக்கு நன்றி தெரிவிக்க இருக்கிறோம். இம்மாநாட்டில் டெல்லியில் இருந்து அகில இந்திய தலைவர்கள், தமிழக காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
ரிசர்வ் வங்கி ஒரு வழிகாட்டுதலை தேசத்தில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பியுள்ளது. ஒரு நகையை அடகு வைக்க வேண்டும் என்றால் பூர்விகத்தின் ரசீதை காட்ட வேண்டும். எப்பொழுது வாங்கினார்கள் எங்கு வாங்கினார்கள், எப்படிப்பட்ட நகை என்று காண்பிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளது. நகை என்பது சேமிப்பாக பூர்வீகமாக இருந்து வருகிறது. பூர்வீகமாக இருக்கும் நகைகளுக்கு எப்படி ரசீது கொடுக்க முடியும். ஏழை எளிய, கிராமங்களில் உள்ள மக்கள் மீது சுமையை மத்திய அரசு சுமத்துகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த அறிக்கையை உடனடியாக திரும்ப பெற வேண்டும். எப்போதும் உள்ளதுபோல் நகையை கொடுத்தால் நகை உரிமையாளர்களுக்கு கடன் அளிக்க வேண்டும். கூட்டுறவு, தேசிய வங்கிகளுக்கு நிதித்துறை இதை ஆணையாக வழங்க வேண்டும்.
ஒரு தனிநபர் தவறு செய்தால், அந்த துறை மீதோ, அரசு மீதோ எப்படி குற்றம்சாட்ட முடியும். ஏற்கெனவே டாஸ்மாக்கில் தவறு செய்தவர்கள் 41 நபர்கள் மீது விசாரணை இருக்கிறது. இதற்காக ஏன் அமலாக்கத்துறை, ஒரு துறை மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் எந்தவித அமலாக்கத்துறை, வருமானவரித்துறை சோதனையும் கிடையாது. ஏன் பாஜக ஆளாத மாநிலங்களில் குறிவைத்து தாக்குகிறார்கள். உச்சநீதிமன்றத்தை அணுகி தான் நீதிப் பெற வேண்டும் என்றால் எதற்கு இங்கு ஆட்சியாளர்கள். இவ்வாறு அவர் கூறினார்.