ஹெல்மெட் போடாததாக கூறி சவுக்கு மீடியாவில் பயணியாற்றும் பணியாளர்கள் இருவரை காவல்துறை கொடுமை செய்வதாக பத்திரிகையாளரும், யூடியூபருமான சவுக்கு சங்கர் குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் சவுக்கு மீடியா நிறுவனர் சவுக்கு சங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவரது ஊடக நிறுவனத்தை முடக்குவதற்காக தொடர்ந்து அச்சுறுத்தல்கள் மற்றும் பொய் வழக்குகள் தொடரப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். “எனது வீட்டில் கழிவுநீர் மற்றும் மனித மலம் ஊற்றப்பட்டது. இரண்டு முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டேன்,” என அவர் தெரிவித்தார். இவ்வாறான சவால்களுக்கு மத்தியில், சவுக்கு மீடியாவை மீண்டும் தொடங்கி நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
நேற்று இரவு 11:30 மணியளவில், சவுக்கு மீடியாவில் பணியாற்றும் கேமராமேன் ஜெயபிரகாஷ் மற்றும் விஷுவல் எடிட்டர் சத்தியமூர்த்தி ஆகியோரை காவல்துறையினர் அவர்களது வீடுகளுக்கு சென்று அழைத்துச் சென்றனர். திருமங்கலம் மற்றும் கே.கே.நகர் காவல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இவர்கள், 2023ஆம் ஆண்டு ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதாக குற்றம் சாட்டப்பட்டனர். இது தொடர்பாக அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சவுக்கு சங்கர், இந்த நடவடிக்கையை ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் முயற்சியாக விமர்சித்தார்.
சவுக்கு சங்கர், சென்னை மாநகராட்சியின் கழிவுநீர் சுத்திகரிப்பு தொடர்பான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று மதியம் 2:15 மணிக்கு விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில், அவரது ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை, இந்த வழக்கை பலவீனப்படுத்தும் முயற்சியாக அவர் கருதுகிறார். “ஒரு சாதாரண ஹெல்மெட் வழக்கிற்காக இரவு 11 மணிக்கு வீட்டிற்கு சென்று வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டிய அவசியம் என்ன?” என அவர் கேள்வி எழுப்பினார்.
சவுக்கு சங்கர், சென்னை காவல் ஆணையர் அருண் மீது அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக உள்துறை செயலாளரிடம் புகார் அளித்துள்ளார். தமிழ்நாடு அரசால் 2019ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட காவல்துறை புகார் ஆணையத்தில் (Police Complaints Authority) இந்த புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. உள்துறை செயலாளர் இல்லாத நிலையில், துணை செயலாளர் செல்வ கணபதியிடம் இந்த புகாரை அளித்ததாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை “பொம்மை முதல்வர்” என விமர்சித்த சவுக்கு சங்கர், காவல்துறையின் இந்த நடவடிக்கைகளுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என கூறினார். “முதல்வர் பத்திரிகையாளர்களை விமர்சிக்க தாராளமாக அனுமதிப்பதாக கூறினாலும், இரவு நேரத்தில் ஊழியர்களை அச்சுறுத்துவது எந்த வகையில் நியாயம்?” என அவர் கேள்வி எழுப்பினார். 2026ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் இந்த அரசை வீட்டிற்கு அனுப்புவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
சவுக்கு மீடியாவின் ஊழியர்களை குறிவைப்பதன் மூலம், ஊடக நிறுவனத்தை முடக்குவதற்கு முயற்சி நடப்பதாக சவுக்கு சங்கர் குற்றம்சாட்டினார். “எனது ஊழியர்களை அச்சுறுத்துவதன் மூலம், என்னுடன் பணியாற்ற ஆளில்லாமல் செய்ய முயல்கிறார்கள். இது 2026 தேர்தலில் சவுக்கு மீடியாவின் செல்வாக்கை குறைக்கும் முயற்சி,” என அவர் கூறினார். மேலும், சென்னை பத்திரிகையாளர் மன்றம் காவல் ஆணையர் அருணின் கட்டுப்பாட்டில் செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.