டாஸ்மாக் நிறுவனத்தை முடக்க அமலாக்கத்துறை முயற்சி: அமைச்சர் முத்துசாமி!

எந்த ஆதாரமும் இல்லாமல் டாஸ்மாக் நிறுவனத்தின் மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது என்று அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அரசு மதுபான நிறுவனமான டாஸ்மாக் வழக்கை சுப்ரீம் கோர்ட்டு கூர்ந்து கவனித்து, சரியான தீர்ப்பை வழங்கி உள்ளது. டாஸ்மாக் மட்டுமல்ல, அரசின் எந்த துறையிலும் தவறு நடக்க கூடாது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெளிவாக உள்ளார்.

டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரிகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமலாக்கத்துறை நடத்திய விதம் வருத்தத்திற்குரியது. டாஸ்மாக் நிறுவனத்தை முடக்கும் விதமாக அமலாக்கத்துறை நடவடிக்கை உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த முன்னெடுப்புக்கு நியாயம் இருப்பதை, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு காட்டுகிறது.

அரசியலமைப்பு சட்டம்தான் எல்லாவற்றிற்கும் உயர்வானது என்பதை இந்த உத்தரவு சுட்டிக்காட்டியுள்ளது. டாஸ்மாக்கில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து, தமிழக அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது. ஆனால், எந்த ஆதாரமும் இல்லாமல் டாஸ்மாக் நிறுவனத்தின் மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. இது தவறான அணுகுமுறையாகும். அமலாக்கத்துறை கூறும் அளவுக்கு தவறுகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.