கீழடி ஆய்வறிக்கை சரியாகவே உள்ளது: அமர்நாத் ராமகிருஷ்ணன்!

இந்திய தொல்லியல் துறைக்கு தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் எழுதிய கடிதத்தில், கீழடி ஆய்வறிக்கை சரியாகவே உள்ளது என்றும் தொன்மை அறிவியல் முறைப்படி ஆய்வு செய்யப்பட்டு, கி.மு 800 முதல் கி.பி. 500 என உறுதி செய்யப்பட்ட பிறகே அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கீழடி அகழாய்வு களத்தின் தொல்லியல் கண்காணிப்பாளராக பணியாற்றிய அமர்நாத் ராமகிருஷ்ணா மற்றும் அவரது குழுவினரின் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள் மூலம் நகர நாகரிகம் இருந்ததற்கான முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்தனர். இந்நிலையில், அமர்நாத் ராமகிருஷ்ணா அசாம் மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு எழுந்த நிலையில், 3 ஆம் கட்ட அகழாய்வை நடத்திய ஸ்ரீராமன், ஏற்கனவே கிடைத்த பொருட்கள் கிடைப்பதாக கூறி அகழாய்வை நிறைவு செய்தார். அதன்பின், தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை 4 ஆம் கட்ட அகழாய்வை தொடங்கிய நிலையில், தற்போது கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது.

இதனிடையே கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கீழடியின் முதல் 2 கட்ட அகழாய்வு அறிக்கையை இந்திய தொல்லியல் துறையிடம் அமர்நாத் ராமகிருஷ்ணா சமர்ப்பித்திருந்தார். 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இந்திய தொல்லியல் துறை கீழடி அகழாய்வு அறிக்கையை இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில், கீழடி முதல் 2 கட்ட அகழாய்வு ஆய்வறிக்கையில் நுட்பமான விவரங்களுடன் திருத்தங்கள் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு இந்திய தொல்லியல் துறை கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில் கி.மு 5 ஆம் நூற்றாண்டிலிருந்து 8 ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் இடத்திற்கு திட்டவட்டமான நிரூபணம் தேவைப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற 2 இடங்கள் குறித்த தகவல்கள் அறிவியல்பூர்வமாக பெறப்படவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. சில வரைபடங்கள் போதிய தெளிவின்றி இருப்பதாகவும் சில விவரங்கள் அளிக்கப்படவில்லை என்றும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 நிபுணர்கள் அளித்த பரிந்துரையின்படி அறிக்கை திருத்தி எழுத கேட்டுக்கொள்ளப்படுவதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்திய தொல்லியல் துறை இயக்குநருக்கு தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் எழுதிய கடிதத்தில், கீழடி ஆய்வறிக்கை சரியாகவே உள்ளது என்றும் தொன்மை அறிவியல் முறைப்படி ஆய்வு செய்யப்பட்டு, கி.மு 800 முதல் கி.பி.500 என உறுதி செய்யப்பட்ட பிறகே அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே திருத்தம் தேவையில்லை என்றும் அவரது கடிதத்தில் அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அடுக்குகள் வாரியாகவும், கால வரிசைப்படியும் அனைத்து ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளன. அகழாய்வு தொடர்பான வரைபடங்கள், தட்டுகள், படங்கள் அனைத்தும் உயர் தெளிவுத்திறனுடன் வழங்கப்பட்டுள்ளன. இறுதி ஆய்வறிக்கையை தாக்கல் செய்து ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் கேள்வி எழுப்பப்படுகிறது என்றும் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.