தமிழகத்தில் சமீபகாலமாக லாக்-அப் மரணங்கள் அதிகளவில் ஏற்படுவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
இரும்புக்கரம் கொண்டு குற்றங்களை அடக்கும் போர்வையில், காவல்துறையின் மிருகத்தனமான அத்துமீறல்களும், எண்ணற்ற லாக்-அப் மரணங்களும்தான் திமுக ஆட்சியில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
2024 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் அக்டோபர் மாதம்வரையில், சென்னை புழல் மத்திய சிறையில் 304 கைதிகளுக்கு எலும்பு முறிவு காயங்கள் ஏற்பட்டதற்கு, வழுக்கும் கழிப்பறைகளையே காரணமாக திமுக அரசு கூறியது.
2021 முதல் 2022 வரையில், மொத்தம் 109 லாக்-அப் மரண வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன; இது 70 சதவிகிதத்துக்கும் அதிகமானதாகும். 2022-ல் சென்னையில் காவல் நிலையத்திலேயே 25 வயதான இளைஞரும், திருவண்ணாமலை காவல் நிலையத்தில் 47 வயதான ஒருவரும், 2023-ல் தென்காசியில் 23 வயது தலித் இளைஞர் ஒருவரும் படுகொலை செய்யப்பட்டனர்.
காவல்துறையின் அத்துமீறல்கள் நீளும் வேளையில், மறுபுறம் போதைப்பொருள், பாலியல் வன்கொடுமை, கொலை, சாதிய வன்முறை குற்றங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தனது சொந்த வேலைகளுக்காக, காவல்துறையை திமுக பயன்படுத்துவதுதான் காரணம்.
இனியாவது, காவல்துறை மற்றும் குற்றவாளிகளின் அத்துமீறல்களை திமுக அடக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. அமைதிப் பூங்கா தமிழகம் என்று கூறிவரும் திமுக, முதலில் தமிழக மக்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.