பெயரளவிலான திட்டங்களைச் செயல்படுத்தாமல் குரோமியக் கழிவுகளை நிரந்தரமாக அகற்றும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாட்டின் தீராத பெருந்துயரங்களில் குறிப்பிடத்தக்கது ராணிப்பேட்டை குரோமியக் கழிவுகளும், அதனால் அப்பாவி பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புகள் தான். இது குறித்து தமிழக அரசுக்கு தெரிந்திருந்தும், ராணிப்பேட்டை அமைச்சரின் தொகுதியாக இருந்தும் இந்த சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண தமிழக அரசு இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கதாகும்.
ராணிப்பேட்டை சிப்காட்டில் 1975ம் ஆண்டில் தொடங்கப்பட்ட தமிழ்நாடு குரோமேட்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ் தொழிற்சாலை பல்வேறு மாற்றங்க ளுக்குப் பிறகு 1989ம் ஆண்டில் மூடப்பட்டது. மூடப்பட்ட ஆலையில் 2.50 லட்சம் டன் குரோமியம் இருப்பு வைக்கப்பட்டிருக்கிறது. அது அகற்றப்படா ததால், அது வேதிவினை புரிந்து நீரிலும், நிலத்திலும் கலந்து வருகிறது.
35 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் இந்த பேரழிவால் அப்பகுதியில் உள்ள 700 ஏக்கருக்கும் கூடுதலான நிலங்கள் எதற்கும் பயன்படாத மலட்டுத் தன்மை கொண்டவையாக மாறிவிட்டன. இன்னொருபுறம், அங்குள்ள மக்கள் புற்று நோய், அதிக ரத்த அழுத்தம், நுரையீரல் புற்று நோய், இதய நோய்கள், மாரடைப்பு, கல்லீரல் பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு, ஆண்மைக் குறைவு உள்ளிட்ட நோய்களால் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்குக் காரணம் மக்கள் பயன்படுத்தும் நிலத்தடி நீரிலும் குரோமியக் கழிவுகள் கலந்திருப்பது தான் என்று கூறப்படு கிறது.
ராணிப்பேட்டை குரோமியக் கழிவுகள் விவகாரத்தில் வேதனையளிக்கும் உண்மை என்னவென்றால், விளம்பரத்திற்கான திட்டங்களை செயல் படுத்த நூற்றுக்கணக்கான கோடிகளை வீணடிக்கும் திராவிட மாடல் ஆட்சியாளர்கள், இந்த சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை என்பது தான். ராணிப்பேட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் காந்தி அமைச்சரவையிலும், கட்சியிலும் செல்வாக்கு மிக்கவராக இருந்தாலும் இன்று வரை மக்களை அழிக்கும் இந்த சிக்கலை அவரால் தீர்க்க முடியவில்லை.
பொதுவாக, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தொழிற்சாலைகளின் கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கும், நீர் ஆதாரங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், குறிப்பாக ராணிப்பேட் டையில் குவிந்து கிடக்கும் குரோமியக் கழிவுகளை அகற்ற வேண்டும் என்றும் கடந்த 30 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் மருத்துவர் ராமதாஸ் தலைமையி லும், எனது தலைமையிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பரப்புரை பயணங்கள், போராட்டங்கள் என எண்ணற்ற இயக்கங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆனாலும் ஆட்சியாளர்கள் அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ராணிப்பேட்டை பகுதியில் குரோமிய பாதிப்புகள் குறித்து அண்ணா பல்கலைக் கழகத்தின் சார்பில் ஆய்வுகள் நடத்தப்பட்டு, அதன் அறிக்கை கடந்த 2020ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அதில் தெரியவந்த அதிர்ச்சியூட்டும் உண்மை என்னவென்றால், ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில், தமிழ்நாடு குரோமேட்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ் தொழிற்சாலை வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ள குரோமியக் கழிவுகளில் இருந்து மட்டுமில்லாமல், வேறு பல ஆதாரங்களில் இருந்தும் குரோமியக் கழிவுகள் வெளியாகின்றன என்பது தான். அப்போதே அதை சுட்டிக்காட்டி, ராணிப்பேட்டையில் குரோமியக் கழிவுகளை அகற்றவும், ராசயனத் தொழிற்சாலைகளில் இருந்து குரோமியக் கழிவுகள் வெளியேறுவதைத் தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது. அதே நேரத்தில் இந்த விவகாரத்தை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தானாக விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற விசாரணையின் முடிவில் பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த ஆணையின் அடிப்படையில் குரோமியக் கழிவுகள் பரவுவதைத் தடுக்க இடைக்காலத் தீர்வுத் திட்டம் ஒன்றை செயல்படுத்த தமிழ்நாடு மாசுக்கட்டுப் பாட்டு வாரியம் முன்வந்திருக்கிறது. இது வரவேற்கப்பட வேண்டிய து தான் என்றாலும் கூட, இது போதுமானதல்ல. தமிழ்நாடு குரோமேட்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ் தொழிற் சாலை வளாகத்திலிருந்து குரோமியக் கழிவுகள் வெளியேறுவதைத் தடுப்பது தான் இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். ஆனால், உண்மையான பிரச்சினை இதை விட பல நூறு மடங்கு பெரியது ஆகும்.
ராணிப்பேட்டை குரோமியக் கழிவுகள் சிக்கலுக்கு நிரந்தரமானத் தீர்வு அங்கு குவித்து வைக்கப் பட்டிருக்கும் குரோமியக் கழிவுகளை அகற்றுவது ம், அதனால் மண் மற்றும் நீரில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைப் போக்குவதும் தான். சாதாரணமாக நிலத்தடி நீரில் அனுமதிக்கப்பட்ட குரோமியத்தி ன் அளவு லிட்டருக்கு 0.05 மில்லி கிராம் மட்டும் தான். ஆனால், ராணிப்பேட்டை சிப்காட் வளாகத்தில் லிட்டருக்கு 20 மி.கி வரையிலும், குரோமியக் கழிவுகள் நேரடியாக கலக்கும் பகுதிகளில் 55 மி.கி வரையிலும் குரோமியம் கலந்திருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இயல்பை விட 1100 மடங்கு அதிகமாக குரோமியம் கலந்த நீரை பயன்படுத்துவோருக்கு ஏற்பட்டு வரும், ஏற்படும் பாதிப்புகளை நினைக்கவே அச்சமாக உள்ளது.
இந்த சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்குடன் 6 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட திட்டத்தின்படி குரோமியக் கழிவுகளை அகற்றவும், அப்பகுதியை சுத்திகரிக்கவும் ரூ.223.17 கோடியும், நீரில் கலந்திருக்கும் குரோமிய மாசுக்களை அகற்ற ரூ.11.28 கோடியும் செலவாகும் என்று மதிப்பிடப் பட்டது. இது தவிர தண்ணீரில் குரோமிய மாசுக்களை முற்றிலுமாக அகற்ற மாதம் ரூ.1.55 கோடி வீதம் 10 ஆண்டுகளுக்கு தொடர்ந்து செலவழிக்க வேண்டும் என்றும் வல்லுனர்கள் கூறியுள்ளனர். இது தான் இந்த சிக்கலுக்கு நிரந்தரத்தீர்வாக அமையும் என்று பாட்டாளி மக்கள் கட்சி உறுதியாக நம்புகிறது.
எனவே, இந்த விவகாரத்தில் அலட்சியம் காட்டாமல், பெயரளவிலான திட்டங்களைச் செயல்படுத்தாமல் குரோமியக் கழிவுகளை நிரந்தரமாக அகற்றும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். மக்களையும், இயற்கையையும் காக்கும் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசின் சார்பில் அலட்சியம் காட்டப்பட்டால் அதைக் கண்டித்து மாபெரும் மக்கள் போராட்டத்தை நானே தலைமையேற்று நடத்துவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.