தமிழக அரசு, மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றாமல், உயர்த்திய சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
நகராட்சிகள், மாநகராட்சிகளில் சொத்து வரி 6 சதவீதம் உயர்த்தப்பட்டு அறிவிப்பே வெளியிடாமல் அமலுக்கு வந்தது. தமிழக அரசின் உத்தரவு அடிப்படை யில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், மீண்டும் சொத்து வரியை, 6 சதவீதம் உயர்த்தியுள்ளன. வீட்டு வரி, தண்ணீர் வரி உயர்ந்துள்ளது.
இது தமிழக அரசுக்கு வருவாயை ஈட்ட வழி வகுக்கும் என்றால் மக்களுக்கு கூடுதல் பொருளாதார சிரமத்தை ஏற்படுத்த வழி வகுக்கும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சொத்து வரியை உயர்த்தி, கிராமப்புற மக்களின் மீது பொருளாதார சுமையை ஏற்றியுள்ளது.
2025 – 2026ம் நிதி ஆண்டில் ஏற்கனவே உயர்த்தப்பட்ட சொத்து வரியிலிருந்து ஆறு சதவீதம் வரை உயர்த்தப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் வரி செலுத்துவோர் மிக கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அதாவது ஏற்கனவே தமிழக அரசு இரண்டு முறைக்கு மேல் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் உள்ள வீடுகள், கடைகளுக்கு சொத்து வரியை உயர்த்தியதால் பொது மக்கள் குறிப்பாக சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இப்போது ஆண்டுதோறும் 6 சதவீத வரி உயர்வையும் நடைமுறைப்படுத்துவதை மக்கள் எதிர்க்கிறார்கள். காரணம் சொத்து வரி உயர்வால் பல பொருட்களின் விலைவாசி உயர்ந்து அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் ஒட்டுமொத்த சீரமைப்பு என்ற பெயரில், புதிய விகிதங்களை நிர்ணயிப்பதால் வீட்டு உரிமையாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.
தமிழக அரசு ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூறிவிட்டு, மக்கள் மீது பொருளாதார சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவது முறையற்றது. எனவே தமிழக அரசு, இனிமேல் மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றாமல், உயர்த்திய சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.