தி.மு.க. அரசு தமிழகத்தின் கடனை ரூ.8 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது: தமிழிசை!

தி.மு.க. அரசு தமிழகத்தின் கடனை ரூ.8 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

சென்னையில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தெலுங்கானா மாநில முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று வெற்றி பெற்று பேச வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியிருக்கிறார். தேர்தல்களை நாங்கள் எப்படி அணுகுகிறோமோ, அதேபோல் அமைச்சர் சேகர்பாபுவும் அணுக வேண்டும். அவர்கள் எவ்வாறு வெற்றி பெறுகிறார்கள் என்பதை தேர்தல் களத்தில் கண்டுள்ளேன். வெற்றி பெற்றவர்கள் அனைவரும் திறமையானவர்கள் என்றோ, தோல்வி அடைந்தவர்கள் திறமையற்றவர்கள் என்றோ சொல்லிவிட முடியாது.

தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ந்து வருகிறது. தி.மு.க.வை விமர்சிக்க கூடாது என்று அமைச்சர் சேகர்பாபு சொல்லக்கூடாது. நாங்கள் விமர்சிப்போம். தி.மு.க. அரசின் 4 ஆண்டு சாதனைகள் மத்திய அரசின் நலத்திட்டங்களுக்கு தமிழில் பெயர் வைத்து ஸ்டிக்கர் ஒட்டியதுதான். தி.மு.க. அரசு தமிழகத்தின் கடனை ரூ.8 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதுதான், அவர்களின் சாதனை. அனைத்து விஷயத்திலும் தோல்வி அடைந்த அரசாக தி.மு.க. அரசு உள்ளது.

சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு வினாத்தாளில் சாதி பெயருடன் பெரியார் பெயர் இடம் பெற்றிருந்தது அதிகாரிகள் தவறு. அதை நான் ஏற்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.