இந்தியா கூட்டணி உடையும் என்று யாரும் பகல் கனவு காண வேண்டாம். இந்தியா கூட்டணியை எந்த கொம்பன் வந்தாலும் அசைக்க முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
திருச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வந்திருந்தார். புத்தூர் பகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 8 ஆம் தேதி திறந்துவைத்த சிவாஜி கணேசன் சிலைக்கு செல்வப்பெருந்தகை மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து, திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை கூறியதாவது:-
திருச்சியில் சிவாஜி சிலையைத் திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் கலந்து கொண்டது தொடர்பாக சிலர் புரிதல் இல்லாமல் பேசுகிறார்கள். மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தின் மீது தாக்குதல் நடத்துகிறது. ஆனால், இந்த நிதியாண்டில் எந்த நிதியும் ஒதுக்காமல் முழுமையாக தமிழ்நாட்டை புறக்கணித்து உள்ளார்கள். தேசிய கல்வி கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் கல்வி நிதி ஒதுக்கப்படும் என கூறுகிறார்கள். இது சர்வாதிகாரம். காங்கிரஸ் ஆட்சியின் போது ஒரு திட்டத்தை கொண்டு வந்தோம். அந்த திட்டத்தை தமிழ்நாடு ஏற்றுக் கொள்ளாது என அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கூறினார். இருந்த போதும் தமிழ் நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்கினோம். பா.ஜ.க தொடர்ந்து தமிழகத்தை புறக்கணிக்கிறது.
தமிழ்நாட்டு அரசு மீதும், அமைச்சர்கள் மீதும், தமிழக அரசு துறைகள் மீதும் தொடர் தாக்குதலை மத்திய அரசு நடத்துகிறது. இதற்கு உச்ச நீதிமன்றம் சவுக்கடி தீர்ப்பு கொடுத்துள்ளது. இது மிகப்பெரிய கேடு. மாநிலங்களுக்கான கூட்டாட்சி தத்துவத்தை பின்பற்ற மாட்டோம். எதுவாக இருந்தாலும் உச்ச நீதிமன்றத்தை நாடிதான் நீதி பெற வேண்டும் என்கிற நிலை இருந்தால் எதற்காக மத்திய அரசு?. பாஜகவிற்கும், அதிமுகவிற்கு வரும் தேர்தலில் தமிழக மக்கள் பதிலடி கொடுப்பார்கள். ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க. உள்ளிட்ட அமைப்புகள் ஆன்மிகத்தை அரசியலாக்குகின்றன. கலவர பூமி ஆக்குவதுதான் அவருடைய நோக்கமாக உள்ளது.
காங்கிரஸ் கட்சி தேச பக்தர்களை கொண்ட கட்சி. ஆனால் பா.ஜ.க. தேசத்தை கொள்ளை அடித்து நாட்டையே துவம்சம் செய்யும் கட்சி. தேசத்தை கொள்ளையடிக்க வந்த திருடர்கள்தான் பாஜகவினர். பெரியார் தன்னுடைய ஜாதி அடையாளத்தை துறந்தவர். ஆனால் ஜாதி அடையாளத்தோடு யு.பி.எஸ்.சி. தேர்வில் கேள்விகள் வைப்பது தமிழ்நாட்டை கலவர பூமியாக்கும் பா.ஜ.க வின் திட்டத்தின் வெளிப்பாடே. வேண்டுமென்றே மதரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் நாட்டை பிரிக்க வேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்சின் அஜெண்டா. அதைதான் அவர்கள் தொடர்ந்து செய்கிறார்கள். இந்தியா கூட்டணியை எந்த கொம்பன் வந்தாலும் அசைக்க முடியாது. இது எக்கு கோட்டை போல் உறுதியான கூட்டணி. இந்த கூட்டணி உடையும் என்று யாரும் பகல் கனவு காண வேண்டாம். பெண்களுக்கு எதிரான கட்சிதான் பாஜக. அவர்கள் பிற்போக்குவாதிகள். இவ்வாறு அவர் கூறினார்.