மாவோயிஸ்டுகள் மீதான அழித்தொழிப்பு நடவடிக்கையை ஒன்றிய அரசும் சத்தீஸ்கர் மாநில அரசும் உடனடியாக கைவிட்டு அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி, அரசியல் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ(எம்எல்) லிபரேசன் கட்சிகளின் சார்பில் ஜூன் 2 அன்று சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஒன்றிய அரசும், பாஜகவின் சத்தீஸ்கர் மாநில அரசும் நக்சல் ஒழிப்பு என்ற பெயரில் மாவோயிஸ்டுகளை ஆயுதப் படைகளை கொண்டு தீவிரமாக அழித்து ஒழித்து வருகின்றன. கடந்த 22-ம் தேதி ஒரு நாள் மட்டும் 27 பேர் கொடூராமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர்.
மாவோயிஸ்டுகள் அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று சொன்ன பிறகும், ஒன்றிய, மாநில அரசுகள் அழித்தொழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருவது வன்மையான கண்டத்திற்குரியது. மலை வளங்களையும், இயற்கை வளங்களையும், கனிம வளங்களையும் கார்ப்பரேட் மற்றும் அந்நிய நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதை எதிர்த்து போராடி வரும் பழங்குடி மக்களையும், அவர்களது போராட்டங்களை ஆதரித்து, உதவி வருபவர்களையும் முற்றிலுமாக அப்புறப்படுத்தும் அதிகார அத்துமீறல் செயலாகும்.
அதேபோன்று பழங்குடியின மக்கள் தங்கள் வாழ்வுரிமைக்காக, வன உரிமைகளுக்காக போராடுகிறபோது அடர்ந்த உள் வனக் காட்டுப்பகுதியில் அவர்களுக்கான பாதுகாவலர்களாக மாவோயிஸ்டுகள் செயல்படுவதை அவர்கள் ஏற்கவில்லை. மாவோயிஸ்டுகளின் வழிமுறைகளையும், ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துக்களையும், நடைமுறைகளையும் முற்றிலுமாக நிராகரிக்கிறோம்.
மாற்றுக் கருத்து கொண்டிருப்பவர்கள் அனைவரையும் அழித்தொழிப்பது என்ற பயங்கரவாத செயல்களை அனுமதிக்க முடியாது. அப்படியான நடைமுறை நாகரிக, ஜனநாயக வழிமுறை அரசின் அடையாளமாக இருக்க முடியாது. அங்கு காட்டுமிராண்டித்தனமே எஞ்சி நிற்கும். பாஜக அரசுகள் சத்தீஸ்கர் மாநிலத்தில் கட்டவிழ்த்து விட்டுள்ள அடக்குமுறை நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கிறோம்.
மாவோயிஸ்டுகள் மீதான அழித்தொழிப்பு நடவடிக்கையை ஒன்றிய அரசும் சத்தீஸ்கர் மாநில அரசும் உடனடியாக கைவிட்டு அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி, அரசியல் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இது எல்லாவற்றையும் விட மலையில் உள்ள வளங்களை தனியாருக்கு கொடுப்பதை உடனடியாக ஒன்றிய அரசும் சத்தீஸ்கர் மாநில அரசும் கைவிட வேண்டும்.
இதுவரை நடந்துள்ள போலி மோதல்கள் குறித்து முழுமையான நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 02.06.2025 ஆம் தேதி திங்கட்கிழமை சென்னையில் சிபிஐ (எம்), சிபிஐ, விசிக, சிபிஐ (எம்.எல்) லிபரேசன் ஆகிய கட்சிகள் கூட்டாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானித்து இருக்கின்றன.
அரசு பயங்கரவாதத்திற்கு எதிராக, ஜனநாயகத்திற்காக, பழங்குடியின மக்களின் உரிமைக்காக நடைபெறும் நியாயமான போராட்டத்தில் அனைத்து ஜனநாயக சக்திகளும் கலந்து கொண்டு பேராதரவு அளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.