உயர்கல்வி நிறுவனங்களில் பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கு எதிரான பாகுபாடு மோடி அரசாங்கத்தால் கடைபிடிக்கப்படுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். தகுதியானவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை (NFS) என்று நிராகரிப்பது மனுவாதத்தின் ஒரு புதிய வடிவம் என்று அவர் சாடியுள்ளார்.
இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-
பொருத்தமானவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது மனுவாதத்தின் புதிய வடிவம் என்பதுதான் உண்மை. தகுதியான பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை கல்வி மற்றும் தலைமைத்துவத்திலிருந்து விலக்கி வைக்க வேண்டுமென்றே ‘தகுதி நீக்கம்’ செய்யப்படுகிறார்கள். கல்விதான் சமத்துவத்துக்கான மிகப்பெரிய ஆயுதம் என்று பாபாசாகேப் கூறியிருந்தார். ஆனால் மோடி அரசாங்கம் அந்த ஆயுதத்தை மழுங்கடிப்பதில் மும்முரமாக உள்ளது.
டெல்லி பல்கலைக்கழகத்தில், பேராசிரியர்களின் 60 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களும், இணைப் பேராசிரியர்களின் 30 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களும் பொருத்தமானவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை (NFS – Not For Suitable) என்று கூறி காலியாக வைக்கப்பட்டுள்ளன. ஐஐடிகள், மத்திய பல்கலைக்கழகங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. எல்லா இடங்களிலும் இதுபோல ஒரே சதி நடக்கிறது.
பொருத்தமானவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது அரசியலமைப்பின் மீதான தாக்குதல். பொருத்தமானவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது சமூக நீதிக்கு இழைக்கும் துரோகம். இது கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான போராட்டம் மட்டுமல்ல, உரிமைகள், மரியாதை மற்றும் பங்கேற்புக்கான போராட்டம். நான் இப்போது டியுஎஸ்யு மாணவர்களிடம் பேசினேன், பாஜக/ஆர்எஸ்எஸ்-ன் ஒவ்வொரு இடஒதுக்கீட்டு எதிர்ப்பு நடவடிக்கைக்கும் அரசியலமைப்பின் சக்தியுடன் பதிலளிப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.