மாணவர்களை இடைநீக்கம் செய்து வெளியேற்றியிருப்பது கொடுங்கோன்மையாகும்: சீமான்!

திருப்பெரும்புதூரில் உள்ள ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பட்டு நிறுவன மாணவர்கள் ‘பாலஸ்தீனம் விடுதலை’ ‘ஜெய் பீம்’ என்று அறையில் எழுதி வைத்தமைக்காக இடைநீக்கம் செய்து வெளியேற்றியிருப்பது கொடுங்கோன்மையாகும் என்று சீமான் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதாவது:-

திருப்பெரும்புதூரில் உள்ள ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பட்டு நிறுவனத்தில் ‘ப்ரி பாலஸ்தீனம்’ என்றும் ‘ஜெய் பீம்’ என்றும் தங்கள் அறையில் எழுதி வைத்தமைக்காக மூன்று மாணவர்கள் தேர்வு நடக்கும் காலகட்டத்தையும் பொருட்படுத்தாமல் தேச விரோதிகள் என்று கூறி நேற்று இரவோடு இரவாக வெளியே அனுப்பப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

ஒவ்வொரு நாளும் பாலஸ்தீனிய காசா மண்ணில், இஸ்ரேலிய கொடும்படைகள் நடத்தும் மனிதவேட்டை இந்த நூற்றாண்டில் நடைபெறும் ஈழத்திற்கு பிறகான இன்னுமொரு மிகப்பெரிய இனவழிப்பாகும். அன்று ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்படுவதை வேடிக்கைபார்த்து துணைநின்ற உலக நாடுகள் இன்று பாலஸ்தீன படுகொலையை வேடிக்கைப்பார்த்து அமைதி காக்கின்றது.

இந்தியப்பெருநாடும் பாலஸ்தீன ஆதரவு நிலையிலிருந்து மாறி இனப்படுகொலை நாடான இஸ்ரேலுக்கு துணைநிற்பது மிகுந்த வேதனைக்குரிய கொடுநிகழ்வாகும். இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசுதான் அத்தகைய கொடுஞ்செயலில் ஈடுபடுகிறது என்றால் தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசும் அதற்கு துணைபோவது வெட்கக்கடானது.

ஜெய் பீம் என்ற சொல் எப்படி இந்த நாட்டிற்கு எதிரானது? அரபு நாடுகள் மட்டுமின்றி ஐரோப்பியாவின் பல நாடுகள், ஏன் அமெரிக்காவிலும்கூட பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு எதிராகவும் மாணவர்கள் பெருந்திரளாக கைகளில் பதாகை ஏந்தி பேரணி, ஆர்ப்பாட்டம் மூலம் தங்களின் மனக்கொந்தளிப்பையும், எதிர்ப்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர். தினம் தினம் கொல்லப்படும் பாலஸ்தீன மக்களுக்காக நடைபெறும் அறப்போராட்டங்களுக்கு உலக நாடுகள் பலவும் அனுமதி அளிக்கும் நிலையில், உலகின் மிகப்பெரிய சனநாயக நாடான இந்திய மாணவர்களை போரட அனுமதிக்க மறுப்பதோடு, அவர்களின் கருத்துரிமையையும் மறுத்து, குரல்வளையை நெரித்து, கருத்து தெரிவிப்பதையே பெருங்குற்றமாக கருதி தண்டனையளிப்பது கொடுங்கோன்மையாகும்.

மூன்று மாணவர்களும் இசுலாமியர்கள் என்பதாலேயே தேர்வு நேரம் என்றும் பாராமல் இத்தகைய கடுமையான தண்டனை இந்திய ஒன்றிய அரசின் கீழ்வரும் ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பட்டு நிறுவனத்தால் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள் எப்போதும் அறத்தின் பக்கம் நிற்பார்கள், ஒருபோதும் அநீதிக்கு துணைபோக மாட்டார்கள் என்ற பல்லாயிரம் ஆண்டு தொன்ம வரலாற்றை மாற்றி, பாலஸ்தீனிய மக்களை இனப்படுகொலை செய்து கொண்டிருந்த இஸ்ரேல் நாட்டிற்கு எதிராக மாணவர்களைப் போராட கூட அனுமதிக்கவில்லை என்ற வரலாற்றுப்பெரும் பழியை இதன்மூலம் தமிழினம் சுமக்க நேரிடும் எனவும் எச்சரிக்கின்றேன்.

ஆகவே, திருப்பெரும்புதூரில் உள்ள ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பட்டு நிறுவன மாணவர்கள் மூவர் மீது தேவையின்றி எதேச்சதிகாரப்போக்குடன் எடுக்கப்பட்ட கடும் நடவடிக்கையை கைவிட்டு, அவர்களை உனடியாக தேர்வெழுத அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு இனியும் இத்தகைய கொடுமைகள் தமிழ் மண்ணில் நடைபெறாமல் தடுத்து காத்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.