இந்தியாவில் வேகமாக உயரும் கோவிட் பாதிப்பு: 3000த்தை கடந்தது!

இந்தியாவில் கோவிட் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,000 ஐத் தாண்டியுள்ளதாக மத்திய சுகாதார நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவர தகவல்களில் தெரியவந்துள்ளது.

டெல்லி, கர்நாடகா, கேரளா மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களி மொத்தம் நான்கு பேர் கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர். மீண்டும் வேகமாக கொரோனா பரவினாலும் பெரும்பாலான நோயாளிகள் லேசான பாதிப்பையே சந்தித்துள்ளதாகவும், பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை என்று அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் கேரளா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த மே 22 அன்று 257 ஆக இருந்த கோவிட் ஆக்டிவ் கேஸ்கள், மே 26 அன்று 1,010 ஆக உயர்ந்து இருந்தது. இன்று 3,395 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், 685 புதிய கோவிட் கேஸ்கள் பதிவாகி உள்ளது. இதில் நான்கு பேர் இறந்துள்ளனர் என்று தரவுகள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு தகவலின் படி, இந்தியாவில் தற்போது மொத்தம் 3,395 பேர் கோவிட் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளாவில் 1,336 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிராவில் 467 பேர் கோவிட் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்லியில் 375 பேரும், குஜராத்தில் 265 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் மேற்கு வங்காளத்தில் 205 பேரும், தமிழகத்தில் 185 பேர், உத்தரபிரதேசத்தில் 117 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தம் 1,435 பேர் சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளனர்.

கர்நாடகத்தை பொறுத்தவரை நேற்று 460 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 114 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்த ஆண்டு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 367 ஆக அதிகரித்துள்ளது. அங்கு தற்போது 234 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 27 பேர் சிகிச்சையில் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார். மைசூருவை சேர்ந்த 63 வயதாகும் அவர், 2 கொரோனா தடுப்பூசி போட்டு இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், கோவிட் தொற்று பாதித்த பெரும்பாலான நோயாளிகள் லேசான பாதிப்பு உடையர்கள் என்றும், பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை என்றும் வலியுறுத்தினர். நாடு முழுவதும் போதுமான பரிசோதனை மற்றும் சிகிச்சை உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன என்றும் அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்த கோவிட் தொற்று ஓமிக்ரானின் துணை வகை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம், அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் சமீப காலமாக கொரோனா பாதிப்புகள் பரவலாக காணப்படுகிறது. எனவே மாவட்ட சுகாதார அலுவலர்கள் தேவையான முன்னெச்சரிக்கைகளில் ஈடுபட்டு கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். பொதுமக்கள் தங்களது கைகளை சோப்பினால் சுத்தமாக கழுவ வேண்டும். சானிடைசர் கொண்டு சுத்தம் செய்தல் முக்கியம். கூட்டமான மற்றும் பொது இடங்களுக்கு மக்கள் செல்லும் போது முகக் கவசம் அணிந்துகொள்ள வேண்டும். பொதுமக்கள் முகக் கவசம் அணிவதை ஊக்கப்படுத்த வேண்டும். இருமல், தும்மல் வரும் போது கைக்குட்டையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கைகளால் கண், காது, வாய் ஆகிய உறுப்புகளை தொடுவதை தவிர்த்தல் அவசியம். பொது இடங்களில் ஒருவருக்கு ஒருவர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.