கீழடி ஆய்வறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்: செல்வப்பெருந்தகை!

கீழடி ஆய்வறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று செல்வப்பெருந்தகைகூறியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது:-

இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்கள், கீழடி ஆய்வறிக்கை வெளியிடுவதற்கு இன்னும் ஆதாரங்கள் தேவை என்று கூறியுள்ளார்.

ஆய்வறிக்கையின் இரண்டு கட்ட அகழ்வாய்வின் அறிக்கையை வேண்டுமென்றே காலம் தாழ்த்தி, பின் போதிய ஆவணங்கள் இல்லை என்று கூறுவது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல. ஆரம்பத்தில் இந்திய தொல்லியல் துறை நடத்திய இரண்டு அகழாய்வுகளிலும் 88 கரிம பொருட்கள் கிடைத்தன. இவற்றில் 18 கரிமப் பொருட்கள் ப்ளோரிடாவில் உள்ள பீட்டா அனலிடிகள் லெபோரட்டரியில் ஏஎம்எஸ் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 5 கரிமப் பொருட்கள் புது டெல்லியில் உள்ள இன்டர் யுனிவர்சிடி அக்சலரேட்டர் சென்டரில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

எத்தனை அறிவியல்பூர்வ ஆய்வுகள் நடத்தினாலும், ஒன்றிய அரசு, அதை ஏற்றுக்கொள்ளாமல் காலம் தாழ்த்துவது உள்நோக்கம் கொண்ட செயலாகும். உடனடியாக கீழடி ஆய்வறிக்கை மத்திய அரசு வெளியிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.