திமுக அரசு காழ்ப்புணர்ச்சியோடு என்னை சிக்க வைக்க நினைக்கிறது: பூவை ஜெகன்மூர்த்தி!

சிறுவனை கடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள கேவி குப்பம் எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திமுக அரசு காழ்ப்புணர்ச்சியோடு ஏதாவது ஒரு குற்றச்சாட்டை என் மீது சுமத்தி என்னை சிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறது என்று குற்றம்சாட்டினார்.

திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் தம்பியான 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவனை புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜெகன் மூர்த்தி கடத்தியதாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பெண்ணின் தந்தை உள்பட 5 பேர் கைதாகியுள்ளனர். பூவை ஜெகன்மூர்த்தி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இது ஒருபுறம் எனில் காவல்துறை விசாரணைக்கு அண்மையில் ஆஜராகி பூவை ஜெகன்மூர்த்தி விளக்கம் அளித்தார். இந்த விவகாரத்தில் ஏடிஜிபி ஜெயராம் கைது செய்யப்பட்டு 24 மணி நேர விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டார். அவர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொளி காட்சி வாயிலாக இன்று வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பகுதியில் இருபாலர் பயிலக்கூடிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் கேவி குப்பம் தொகுதி எம்எல்ஏவான பூஜை ஜெகன்மூர்த்தி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கே.வி குப்பத்தில் நாங்கள் மகளிர் கலைக் கல்லூரி வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தோம். ஆனால் இரு பாலரும் பயிலும் கல்லூரியை தமிழக அரசின் உயர்கல்வித்துறை அமைத்திருக்கிறது. கேவி குப்பம் தொகுதி எம்எல்ஏ என்ற முறையில் நான் கேட்டதை கொடுக்காமல், அரசு கொடுத்ததை தான் வாங்க வேண்டும் என்று வலுக்கட்டாயமாகத் திணித்திருக்கிறார்கள். நான்கு ஆண்டுகள் சும்மா இருந்து விட்டு, அவசர அவசரமாக ஆட்சியின் 5 ஆம் ஆண்டு தொகுதிக்கு செய்திருக்கின்றோம் என்று திறந்துள்ளார்கள். திமுகவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற கோணத்தில் இந்த இருபாலர் கல்லூரி திறக்கப்பட்டிருக்கிறது. அதற்கான தொடக்க விழாவும் நடந்திருக்கிறது. இந்த தொடக்க விழா, அரசு விழா போல் இல்லாமல் ஒரு கட்சி விழாவைப் போல நடத்தப்பட்டுள்ளது.

சாதாரண அரசு பள்ளிகளில் இருக்கும் வசதிகள் கூட இந்த புதிய அரசு கல்லூரியில் கிடையாது. இதனை மகளிர் படிக்கக் கூடிய கலைக் கல்லூரியாக மாற்றுவது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும். மேலும் கே.வி.குப்பம் தொகுதியில் பல்வேறு மக்கள் பிரச்னைகள் உள்ளன. அதை இந்த அரசு உடனே நிறைவேற்றி தர வேண்டும். திமுக அரசை தற்போது விவசாயிகள் மட்டுமல்ல.. அனைத்து தரப்பினருமே குற்றம் சாட்டுகின்றனர். விவசாயிகள், நெசவாளர்கள் உள்பட பல்வேறு துறை மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அரசு நிறைவேற்ற வேண்டும்.

தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி உள்ளது. காவல் நிலையத்தையே சூறையாடும் சூழ்நிலையும் உள்ளது. சட்டம் – ஒழுங்கு முழுமையாக கெட்டுப் போயுள்ளது. திமுக அரசின் மீது மக்கள் அதிருப்தியாக இருப்பது உண்மை தான். நான் தமிழக அரசுக்கு எதிராக சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் மக்களின் கோரிக்கைகளைப் பற்றி தொடர்ந்து பேசி வருகிறேன். எனவே, இந்த அரசு காழ்ப்புணர்ச்சியோடு ஏதாவது ஒரு குற்றச்சாட்டை என் மீது சுமத்தி என்னை சிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறது. நாங்கள் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள். நீதிமன்றம் என்ன முடிவெடுத்தாலும் அதனை ஏற்றுக் கொள்வோம்.

எந்த பிரச்னையிலும் ஈடுபடாத ஒரு சாதாரண மனிதனுக்கு நெருக்கடி கொடுப்பதற்கு காரணம் என்ன? இது போன்ற நெருக்கடியை கொடுத்தால் எதிர்க் கட்சியில் இருந்து விலகி விடுவேன் என்றும் இவர்களுடைய கூட்டணிக்கு வந்து விடுவேன் என்றும் நினைக்கிறார்கள். என்ன நடந்தாலும் பரவாயில்லை. நாங்கள் நீதிமன்றத்தை நம்பியுள்ளோம். எப்போது இருந்தாலும் உண்மை வெளிப்படும். நாங்கள் நியாயத்தை எதிர்பார்க்கின்றோம். ஆகவே இந்த மிரட்டலுக்கெல்லாம் நானும் என்னுடைய இயக்கத்தைச் சார்ந்தவர்களும் அடிபணிய மாட்டோம். இவ்வாறு பூவை ஜெகன் மூர்த்தி கூறினார்.