இந்தியாவில் ஆங்கிலம் பேசுவோர் வெட்கி தலை குனியும் காலம் வெகு விரைவில் வரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சிற்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார். ஆங்கிலத்தை ஒழித்துவிட்டு அவ்விடத்தில் இந்தியை உட்கார வைக்க கடந்த 75 ஆண்டுகளாக இந்தி வெறியர்கள் எத்தனையோ வசனங்களைப் பேசிப்பார்த்துவிட்டனர் என்று கூறியுள்ள சு.வெங்கடேசன், புதிதாக ஏதாவது யோசிங்க அமித் ஷா என்றும் கூறி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே இந்தி திணிப்பு குறித்த விவாதம் நடந்து வருகிறது. புதிய கல்விக் கொள்கையை ஏற்காமல் தமிழக அரசு பிடிவாதம் காட்டி வரும் நிலையில், மத்திய அரசு கல்வி நிதியை கொடுக்காமல் இருந்து வருகிறது. அதேபோல் தமிழ்நாட்டில் நடந்து வரும் விவாதம் கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் பரவி இருக்கிறது. அண்மையில் எஸ்பிஐ வங்கி மேலாளர் இந்தியில் பேசுவேன் என்று பேசியதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. அவர் இடமாற்றம் செய்யப்பட்டதோடு, வேறு வழியின்றி மன்னிப்பும் கேட்டார். அதேபோல் மகாராஷ்டிராவில் மராத்தி மொழியை அம்மாநில மக்கள் பேச வேண்டும் என்றும், பள்ளிகளில் இந்திக்கு முக்கியத்துவம் அளிக்க கூடாது என்ற குரல்களும் எழுந்துள்ளன.
இந்த நிலையில் டெல்லியில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் அமித் ஷா பேசுகையில், இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கி தலை குனிவார்கள். அப்படியொரு சமூகம் உருவாகும் நாள் வெகு தொலைவில் இல்லை. அவர்கள்தான் நாட்டில் மாற்றத்தை கொண்டு வரப் போகிறார்கள். இந்தியாவில் உள்ள மொழிகள் தான் நம் கலாச்சாரத்திற்கு ஆபரணங்களை போன்றது. முழுமையான இந்தியா மொழிகள் இல்லாமல் நாம் இந்தியர்களாக இருக்க முடியாது. ஆங்கிலம் உள்ளிட்ட வெளிநாட்டு மொழியில் நமது பாரம்பரியம், வரலாறு, கலாச்சாரம் உள்ளிட்டவற்றை எளிதாக புரிந்து கொள்ள முடியாது. அரைகுறைவான வெளிநாட்டு மொழியால் நாம் ஒருபோதும் முழுமையான இந்தியா என்பதை கற்பனை செய்து பார்க்க முடியாது என்று பேசி இருந்தார்.
அமித் ஷாவின் இந்த பேச்சு புதிய விவாதத்தை தொடங்கி இருக்கிறது. அதாவது ஆங்கிலத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில் இந்தி திணிக்க பார்க்கிறார்கள் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில், ஆங்கிலத்தை ஒழித்துவிட்டு அவ்விடத்தில் இந்தியை உட்கார வைக்க கடந்த 75 ஆண்டுகளாக இந்தி வெறியர்கள் எத்தனையோ வசனங்களைப் பேசிப் பார்த்துவிட்டனர். அதில் அரதப் பழசான வசனம்தான் இன்று அமித்ஷா பேசியுள்ளது. புதுசா ஏதாவது யோசிங்க சார்! என்று பதிவிட்டுள்ளார்.
