டிஆர்பி ராஜா தமிழ்நாட்டில் எங்கும் நடமாட முடியாது: ஆர்பி உதயகுமார்!

தமிழ்நாட்டில் அமைச்சர் டிஆர்பி ராஜா நடமாட முடியாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் எச்சரித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கீழடி அகழாய்வு குறித்த அமர்நாத் ராமகிருஷ்ணனின் அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியது. அதனை ஏற்க கூடுதல் ஆய்வுகள் தேவை என்றும், ஒரேயொரு கண்டுபிடிப்பு மட்டும் எல்லாவற்றையும் மாற்றிவிடாது என்றும் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறி இருந்தார். இந்த விவகாரம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. பல ஆண்டுகளாக ஆய்வு அறிக்கையை வெளியிடாமல் வைத்திருந்த மத்திய அரசு, திடீரென திருப்பி அனுப்பிவிட்டு அறிவியல் ஆதாரங்கள் கேட்டது கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனை கண்டித்து மதுரையில் திமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல் மத்திய அரசுக்கும், பாஜகவுக்கு தமிழ் என்றாலே கசப்பு என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்திருந்தார். அதேபோல் பாஜக உடன் கூட்டணி வைத்திருக்கும் அதிமுக, கீழடி ஆய்வறிக்கையை திருப்பி அனுப்பியது குறித்து வாய் திறக்கவில்லை என்றும் விமர்சித்திருந்தார்.

இதனிடையே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து திமுக ஐடி விங் சார்பாக கார்டூன் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இதனை அதிமுகவினர் கடுமையாக எதிர்த்தனர். இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார், அமைச்சரும், திமுக ஐடி விங் செயலாளருமான டிஆர்பி ராஜா மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

இதன்பின் ஆர்பி உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தன்னுடைய உழைப்பால் முதலமைச்சரானவர் எடப்பாடி பழனிசாமி. மக்கள் மத்தியில் அவரின் செல்வாக்கு அதிகரித்து வருவதால், திமுக தனி மனித விமர்சனத்தில் இறங்கி இருக்கிறது. எங்களாலும் முதல்வர் ஸ்டாலின் பற்றி கார்ட்டூன் வரைய முடியும். ஆனால் அதற்கு அவசியம் இல்லை. கீழடி அகழாய்வை அறிமுகப்படுத்தியதே அதிமுக ஆட்சி தான். அரைவேட்டுத்தனமான டிஆர்பி ராஜா, அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டதற்கு யார் நிதி ஒதுக்கினார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். வரலாறு தெரியவில்லை என்றால், நிதித்துறை செயலாளராக உள்ள உதயச்சந்திரனிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். பாலியல் வன்கொடுமை, கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாகவும் கார்ட்டூம் போடுங்கள். தொடர்ந்து இதுபோல் டிஆர்பி ராஜா இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால், தமிழ்நாட்டில் அவர் எங்குமே நடமாட முடியாது. அதிமுகவினர் முற்றுகை போராட்டத்திற்கும் தயங்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.