திமுக அனைத்து தரப்பினருக்குமான ஆட்சியை செய்து வருவதாக கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, திமுக ஆட்சிக்கு வந்தபின் ஓடாமல் இருந்த திருவாரூர் தேரை ஓட வைத்தவர் கருணாநிதி என்று தெரிவித்துள்ளார்.
மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு நாளை நடக்கவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், அறுபடை முருகன் வீடுகளின் கண்காட்சியை பார்க்க பக்தர்கள் குவிந்து வருகின்றனர். முருகன் மாநாடு தமிழக அரசியலில் விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. இது முருகன் மாநாடு அல்ல, சங்கிகள் மாநாடு என்று அமைச்சர் சேகர்பாபு விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் திமுக சார்பாக செம்மொழி நாள் தொடக்க நிகழ்ச்சியை முன்னிட்டு சென்னை ஒய்எம்சிஏ-வில் மகளிர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக எம்பி கனிமொழி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதன்பின் கனிமொழி கூறியதாவது:-
தமிழ்நாட்டில் முதல்வராக கருணாநிதி ஆட்சிக்கு வந்தபின் தான் திருவாரூர் தேர் ஓடியது. திமுக இந்துக்களுக்கு விரோதி என்று தொடர்ந்து சொல்வார்கள். ஒரே இடத்தில் நின்ற தேரை ஓட வைத்தது கருணாநிதி தான். வாழ்நாள் முழுவதும் நாத்திகத்தை நம்பிய கருணாநிதி, அதே இந்துக்களுக்காக தேரை ஓட வைத்தார். திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்றும் இப்போதும் பேசி வருகிறார்கள். பெண்களை படிக்க வையுங்கள், திருமணத்திற்கு நான் உதவி செய்கிறேன் என்று அறிவித்தார். அந்த திட்டத்தில் எந்த பாகுபாடும் காட்டவில்லை. பெரும்பான்மையாக அந்த திட்டத்தில் பயன்பெற்றது இந்து பெண்கள் தான். பெண்கள் படித்து பட்டதாரியாக மாறியதோடு, இன்று சாதனையாளர்களாக வலம் வருகிறார்கள்.
யாரெல்லாம் படிக்க கூடாது என்று ஒரு மதம் வைத்திருந்ததோ, எந்த இந்துகளை அடக்கி ஒடுக்கி வைத்திருந்தார்களோ, அவர்களுக்கு இந்த சமூகத்தில் நம்பிக்கையை, சுயமரியாதையை உருவாக்கி கொடுத்தது திராவிட இயக்கம் தான். பெரும்பான்மையாக இருக்க கூடிய இந்துக்களுக்கு அதிகம் உழைத்திருப்பதும், நன்மை செய்திருப்பதும் திமுக தான். நான் முதல்வன், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், உரிமைத் திட்டம் என்று எதுவாக இருந்தாலும், பெரும்பான்மையாக இருக்க கூடிய மக்களுக்கு தான் கிடைத்து வருகிறது.
அதனால் ஏதோ ஒரு மாநாட்டை போட்டுவிட்டு, ஒரு வேல் எடுத்து ஊர்வலம் சென்று நான் தான் பக்தி, மக்களை காப்பாற்றுகிறேன் என்ற பசப்பு வார்த்தைகளை மக்கள் நம்ப தயாராக இல்லை. உண்மையில் மக்களுக்கு யார் பணியாற்றுகிறார்கள் என்பது மக்களுக்கும், மகளிருக்கும் நன்றாக தெரியும். திமுக இந்துக்களுக்கு விரோதமாக கட்சி இல்லை. ஆன்மீகத்தை நம்பக் கூடிய மக்களும், நாத்திகத்தை நம்பக் கூடிய மக்களும் எனது இரு கண்கள். திமுக அனைத்து தரப்பினருக்குமான ஆட்சியை செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
